Sep 14, 2018

தமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை!

செப் 15/2018: தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.

தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைதான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. 
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். 

ரங்கசாமி ( ஆண்டனி) எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம். இப்படத்தில் இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நமக்கு இது படம் இல்லை பாடம். இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம். படத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை. தமிழ் சினிமாவுக்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு அற்புத படைப்பு இந்த மேற்கு தொடர்ச்சி மலை. தரமான படத்தை தந்த தமிழன் சேதுபதிக்கு வாழ்த்துக்கள். 
இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. தமிழர்களின் வாழ்வியல் முறையை விளக்கும் பதிவு. 
*மலர் விழி*

No comments: