Jan 11, 2015

சூத்திரனை சுகந்திர மனிதனாக்கிய!?

இந்துக்கள் மத்தியில் நிலவிவரும் தப்பெண்ணங்களை நீக்க ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய் எழுதிய “ இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் “ என்கிற இந்நூல் பெருமளவு உதவும். (சூத்திரனை சுகந்திர மனிதனாக்கிய இஸ்லாம்).

இஸ்லாமை உயர்த்திப் பிடிப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்துக்களைக் களைந்தெறிய உதவுவது சனநாயக வாதிகளின் கடமை என்ற முறையில் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளோம்.

இந்த வரிகளை படித்தப் பிறகு இப்புத்தகம் எத்தகைய தன்மையுடையது யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள் இஸ்லாமிய எழுத்தாளர்களைவிட சில சந்தர்ப்பங்களில் மற்று சித்தாந்த கொள்கையுடைய எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இப்புத்தகத்தைப் படித்தால் தெரிந்துக் கொள்வீர்கள்.

இப்புத்தகத்தின் சிறப்பம்சம் வரலாற்றுச் சான்றுகளை ஆதாரபூர்வமாக இந்தூல் பேசுகிறது ஒரு விடயத்தை சொன்னால் அதற்கான ஆதாரத்தையும் இந்நூல் சுட்டிக் காட்ட தவறுவதில்லை. இந்நூலின் ஆசிரியரைப் பற்றி...எம்.என்.ராய் அவர்கள்....மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் 1887-ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாளன்று எம்.என்.ராய் பிறந்தார்... ஒரு தீவிர தேசியவாதியாக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், ஒரு ஆக்கப்பூர்வமான தீவிர மனிதநேயவாதியாக விளங்கினார்.

இஸ்லாமின் நம்ப முடியாத வெற்றிக்கு ஆன்மீக காரணங்கள் இருந்தது போலவே, சமூக –அரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன. இந்த முக்கியமான கருத்திற்கு ஜிப்பனின் பின்வரும் கூற்று சான்றாக விளங்குகிறது

"அன்றைய ஜொராஸ்டரின் மதத்தைக் காட்டிலும் மிகத் தூய்மையானதும் மோசஸின். கட்டளையைக் காட்டிலும் மிகத் தாரளப் பன்பும் கொண்டிருந்ததுமான, முகம்மதுவின் மதமானது பகுத்தறிவுக் கருத்தோடு மிகக்குறைவான முரண்பாட்டையும், ஏழாம் நூற்றாண்டின்போது கிறித்துவத்தின் எளிமையை எள்ளி நகையாடி வந்த மாயாவாதம், மூடநம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளோடு அதிக முரண்பாட்டையும் கொண்டிருந்தாகத் தோன்றுகிறது. (நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்).

இஸ்லாமின் கண்கவர் வெற்றிக்கு அதன் தொடக்க காலத் தொண்டர்களின் இராணுவ வலிமையைக் காட்டிலும், அதன் விடுதலை, சமத்துவக் கோட்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு மற்றொரு வரலாற்றாசிரியர்பின்வரும் சான்றை முன் வைக்கிறார்:

“அராபியர்கள் வெற்றி கண்ட ஒவ்வொரு கிறித்துவ நாட்டின் விசயத்திலும் வரலாறு வாய்ப்புக் கேடாக ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அராபியர்கள் முன்னேறிச் செல்ல அந்நாட்டு மக்கள் சாதகமாக இருந்ததே அவர்களது வெற்றிக்குரிய காரணமாக இருந்திருக்கிறது. அரபு வெற்றியாளர்களைக் காட்டிலும் பெரும்பாலான கிறித்துவ அரசுகளின் நிர்வாகம் மிக மோசமான ஒடுக்குமுறை கொண்டதாக இருந்திருக்கிறது என்ற செய்தியானது அந்த அரசுகளுக்கு அவமானம் தரும் ஒரு செய்தியாகும். சிரியா நாட்டு மக்கள் முகம்மதுவின் சீடர்களை வரவேற்றார்கள்.

எகிப்தின் காப்டுகள் (மரபு வழி கிருஸ்த்தவர்கள்) அரபுகளின் ஆதிக்கத்தின் கீழ் தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொண்டனர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பெர்பர்கள், ஆப்பிரிக்காவை வெற்றி கொள்ள அரபுக்களுக்கு உதவி புரிந்தனர் இந்த நாடுகள் அனைத்தும் கான்ஸ்டான்டிநோபிள் அரசின் மீது கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக, தங்களை முகம்மதியர்களின் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டார்கள். 

“பைசாண்டியப் பேரரசின் வரலாறு)” கிறித்துவ மூட நம்பிக்கையால்.கிரேக்க அறிஞர்கள் பண்டைய கல்வி நிலையப் பதவிகளிலிருந்து  கட்டாயமாக வெளியேற்றப்பட்டர். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்த கிரேக்க அறிஞர்களை கலீபாக்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். இவர்களின் பணிக்கு உயரிய மரியாதை கிட்டி வந்தது. அறிவாளிகள் பற்றி கலீபா அல்மேனஸ் சொல்லிருந்த கருத்துக்களை, அரபு வரலாற்றாசிரியரான அபுல்பேரானகயஸ் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

"அறிஞர்கள்(ஆலீம்கள்) நபிமார்களின் வாரிசுகள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அவனின் சிறந்த, மிகப்பயனுள்ள ஊழியர்களும் இவர்களே. இவர்கள் பகுத்தறிவு நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.(நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்) இசுலாமும் இந்தியாவும் என்ற அத்தியாயத்தில் பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்குள்ளாகியிருந்த ஜாட்டுகள் இன்னும் இதர விவசாயச் சாதிகளின் உதவியோடு தான் முகம்மது பின் காசிம் சிந்துப் பகுதியை வெற்றிக் கண்டார். (எலியட்:”இந்திய வரலாறு”).

பண்டைய இந்துப் பண்பாட்டின் உறுதியான ஆர்வலரான ஹேவல் முஸ்லிம்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்கள்பால் இரக்கமோ காட்டதவர். இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து அவர் முன்வைத்துள்ள சுவையான சான்று பின்வருமாறு: ”இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டவர்களுக்கு நீதிமன்றத்தில், ஒரு முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அராபியச்சட்டங்களையோ பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. குர்-ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. 

மதமாற்றம் என்ற இந்த வழிமுறையானது இந்துச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே குறிப்பாக, பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால் “அசுத்தமான வர்க்கங்கள்” எனக் கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பைச் செலுத்தி வந்தது.(ஹேவல்- நூல்:இந்தியாவில் ஆரிய ஆட்சி) கடுமையான முஸ்லிம்- எதிர்ப்பு வெறி கொண்ட ஹேவலே கூட வெறுப்போடு ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். அது பின் வருமாறு ”இந்து சமூக வாழ்வின் மீது முஸ்லிம்கள் அரசியல் கோட்பாடு செலுத்திய பாதிப்புகள் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தன.

ஒன்று, அது சாதி அமைப்பின் உக்கிரத்தை அதிகப்படுத்தி அதற்கு எதிராக ஒரு கலகத்தைத் தட்டி எழுப்பியது. பெடோயின்களுக்கு(Bedoins காட்டரபிகள்) அது காட்டியிருந்த மனதைக் கவரும் மயக்கத்தைப் போலவே இந்துச் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு கவர்ச்சியை அது காட்டியிருந்தது. இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது. இதில் சிலர் தங்கள் சுயமான மேதமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். மறுமலர்ச்சியை போலவே இதுவும் சாராம்சத்தில் ஒரு நகர வழிபாடாக இருந்தது. நாடோடிகளை அவர்கள் கூடாரத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. சூத்திரனை கிராமத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. 

வாழ்க்கையில் முழு இன்பக் கிளர்ச்சி கொண்ட ஒரு மனிதகுல வகையை இது வளர்த்தியிருந்தது. (ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி) இப்படி புத்தகம் முழுவதும் வரலாற்று ஆதராங்களோடு விளக்கியிருக்கிறார் இஸ்லாத்தை ஆய்வுரீதியாக விளங்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் நூலின் பெயர்: இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம் ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய். தமிழாக்கம்:வெ.கோவிந்தசாமி
Source :முகநூலகம்
கீழ்காணும் இடங்களிலும் இப்புத்தகம் கிடைக்கலாம்
1. விடியல் பதிப்பகம் 
மின்-அஞ்சல் :vitiyal2000@eth.net
தொடர்பு எண் :914222576772
முகவரி :11, பெரியார் நகர்
மசக்காளிபாளையம் 
வடக்கு கோவை - 641015

No comments: