- ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
- குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
- குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
- விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
நன்றி -வினவு.
2 comments:
Let children show their talent here in Sun singer.
Dịch vụ chuyển phát nhanh từ việt nam đi lào giá thấp
Dịch vụ chuyển phát nhanh từ việt nam sang đài loan
Dịch vụ nhận ship nhanh tại Việt Nam
Post a Comment