Jul 23, 2014

பாலஸ்தீனத்தின் ஆன்மாவான ஹந்தாலா!

ஜூலை 24/14: ஹந்தாலா என்ற கற்பனை குழந்தை கார்டூன் உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய  எதிர்ப்பு போராளிகளின் சின்னமாக விளங்குகிறது. 

ஹந்தாலா என்கிற இந்த உணர்வுபூர்வமான கார்டூன் சித்திரத்தை வரைந்தவர் பாலஸ்தீனத்தின் ஓவியர் நஜி அல் அலி ஆவார்.  இவர் கேலி சித்திரம் வரைபவர்களின் முதுகெலும்பு, இவர் சித்திரங்களை பாஸ்பரிக் அமிலம் கொண்டு வரைகிறார் என்றும் தலை சிறந்த பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர். 

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை வந்த கேலி சித்திரம் வரையும் கார்டூனிஸ்ட்களில் இவரே தலை சிறந்தவர் என்றும் போற்றப்பட்டார். இவரது சித்திரங்கள் பாலஸ்தீன விடுதலை வரலாற்றின், எழுச்சியின் ஒருமைல் கல் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இவரது கார்டூன்கள் உணர்வுபூர்ணமானவை. 

ஹந்தாலா கேலிச்சித்திரத்தின் பொருள்: பின்புறம் மடித்து கைகளை காட்டியபடி நிற்கும் அந்த பத்து வயது சிறுவனது உடைகள் கிழிந்திருக்கும், காலில் செருப்பு இருக்காது, தலை முடி அலங்கோலமாக காட்சியளிக்கும் இதுதான் ஹந்தாலா ஓவியம். இது  பாலஸ்தீன அகதி முகாமில் இருக்கும் ஒரு பத்து வயது சிறுவனின் மனோநிலையை குறிப்பதாகும்.

அவன் தன் தாயகத்தை அடையும் வரை வளர மாட்டான். அவன் தனித்துவமானவன். அவனது புறங்கை மடிப்பு என்பது வெளியில் இருந்து வரும் தாயகத்திற்கு எதிரான ஏகாதிபத்திய மேற்குலக நாடுகளின்  தீர்வுகளை மறுப்பது ஆகும், ஹந்தாலா என்ற அரபுச் சொல்லுக்கு கசப்புத்தன்மை என்று பொருள் ஆகும். ஒவ்வொரு பாலஸ்தீனியனும் தனது விடுதலை வேட்கை என்கிற கடமையில் இருந்து தவறாமல் இருக்க அவர்களின் ஆன்மாவின் குறியீடாக இந்த ஹந்தாலா சித்திரம் அமைந்திருந்தது. 

பாலஸ்தீனத்தின் சுதந்திர வேட்கையை கேலிச்சித்திரங்கள் மூலம் தட்டி எழுப்பியதோடு, பாலஸ்தின மக்களின் பாதிப்புகளை உலகமெங்கும் அறியச் செய்தது நஜி அல் அலியின் கேலிசித்திரங்கள். இப்படி தனது கூர்மையான அரசியல் கார்ட்டூன்களால் இஸ்ரேலின் பயங்கரவாதத்தை உலகுக்கு கொண்டு வந்த இவரை இவரது 49வது வயதில்  இஸ்ரேலின் உளவு அமைப்பான  மொசாத்தின்  உளவாளிகள் லண்டனில் வைத்து (1987 ஜூலை 22 ல்) சுட்டு கொன்றனர்.  

No comments: