Jul 16, 2014

காசா மீது நடத்தப்படும் காட்டுமிராண்டி தாக்குதல்!

சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி.

பாலஸ்தின விடுதலை அமைப்பான ஹமாஸ் காசாவில் வெற்றி பெற்ற நாள் முதல் இஸ்ரேல் காசா மீது முழுமையான முற்றுகையை அமல்படுத்தி காசாவை திறந்த வெளி சிறையாக மாற்றியது. உலகில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் காசாவும் ஒன்று.

இந்நிலையில் கடந்த திங்கள் முதல் காசாவின் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், மசூதிகள், மருத்துவமனைகள், சமூக விடுதிகளைக் குறிவைத்து 1300க்கும் மேற்பட்ட ஆகாய மார்க்க தாக்குதல்களையும் தரைமார்க்க தாக்குதல்களையும் இஸ்ரேல் ராணுவத்தினர் கொடூரமான முறையில் நிகழ்த்திவருகின்றனர். 

காசாவின் அடர்த்தியான மக்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வீசிவரும் குண்டுகளுக்கு இதுவரை 167 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐநா அதிகாரி அறிவித்திருக்கிறார். இதில் 19 பெண்களும், 16 வயதுக்கு குறைவான இருபத்தியொன்பது குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.

இக்காட்டிமிராண்டித்தனமான தாக்குதலால் உணவு, குடிநீர், எரிபொருள், மருந்துப்பொருட்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாடும், எல்லைப்பகுதியிலுள்ள சுரங்க வழிகளை மூடிவிட உத்தரவிட்டுள்ளதால் காசா மக்களின் உயிர் பிழைப்பிற்கான வாய்ப்பு மோசமடைந்துள்ளது.

பாலஸ்தீனத்தை அழிக்கும் இறுதித் தாக்குதலாகவே இஸ்ரேல் இப்பயங்கரத் தாக்குதலை நிகழ்த்துகிறது. ஹமாசை அழிப்போம் அல்லது ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தை அழிப்போம் என்ற கொலைவெறி முழக்கத்தோடு இஸ்ரேல் தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளது. மேலும் இஸ்ரேல் அரசின் மீதான அந்நாட்டு மக்களின் அவநம்பிக்கை அதிகரித்துவரும் சூழலில் தேசிய இனவாத உணர்வைத் தூண்டி அதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள நினைக்கிறது.

காசா மீண்டுமொரு முள்ளிவாய்க்காலாய் மாற்றப்படுகிறது. ஈழத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு முட்டுக்கொடுத்த தமிழக பார்ப்பனிய, இந்திய, மேற்குலக பத்திரிக்கைகள் இன்று யூதர்களின் இன அழிப்புத் தாக்குதலை நியாயப்படுத்தி. இன விடுதலைக்குப் போராடி வருகிற ஹமாஸை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த காசா மக்களையும் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்க பார்க்கிறது. 

No comments: