ஜூலை 10/14: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது எனவே அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்று இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மோடியின் பாஜக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தமிழக மக்களின் முதுகில் குத்தும் செயலாகும்.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர்ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ‘கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்; ‘இந்திய இலங்கை இடையேயான கடல் எல்லை தொடர்பாக கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின்படி கச்சத் தீவு, இலங்கைக்குச் சொந்தமானது. அங்கு ஓய்வு மட்டுமே எடுக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாறாக கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை.’ என கூறியுள்ளது.
இதன் மூலம் கச்சத் தீவு விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டையே தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசும் தொடர்ந்துள்ளது. மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறவில்லை. காங்கிரஸ்-பாஜக ஆகிய கட்சிகள் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்க்கொண்டு வருகின்றன.
முன்னர் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து பாஜக பிரச்சாரம் செய்தது, மேலும் மீனவர்களின் நலன்காக்க கடல் தாமரை மாநாடும் நடத்தியது. ஆனால் தற்போது தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாஜக மேற்க்கொண்டு வரும் நிலைப்பாடு அதன் தேர்தல் நேர நாடகத்தை தெளிவாக காட்டுகிறது. இந்த இரட்டை நிலை மூலம் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள். பாஜகவின் இந்த செயலை கண்டிக்கவாவது அவர்கள் முன்வருவார்களா?
*மலர் விழி*
No comments:
Post a Comment