ஜெனீவா: விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.
தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.
Big Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.
பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.
பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.
இதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god particle)’ என பெயரிட்டார்.
அறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.
2 comments:
ஹிக்ஸ் போஸான் பற்றி ஓரளவு தெளிவு கிடைத்தது.
தகவலுக்கு மிக்க நன்றி..
போஸான்னு ஏன் பேர் வந்ததுன்னும் சொல்லிருக்கலாம்.இந்திய விஞ்ஞானி பேரை வச்சிருக்காங்க.
Post a Comment