Nov 5, 2013

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கா? ராஜபக்சேவா?

நவ 07/2013: வங்கக்கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்துள்ளனர். 

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரு நிகழ்வுகளுமே இந்திய கடல் எல்லைக்குள் தான் நடைபெற்றுள்ளன. மீனவர்களை கைது செய்த சிங்களப்படையினர் அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு ள்ளனர்.  

கடந்த அக்டோபர்  மாதம் 26 ஆம் தேதி தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மீனவர்களின் படகு  சேதமடைந்தது. படகில் இருந்த 6 மீனவர்களும் நூலிழையில்  உயிர் தப்பினர்.

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசு அவர்களை 90 நாட்கள் வரை சிறையில் அடைத்து அவர்களின் பிழைப்பைக் கெடுப்பதுடன், படகுகளையும் நாட்டுடைமையாக்கி வாழ்வாதாரத்தை பறிக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 35 படகுகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையான 200-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

சிந்திக்கவும்: இந்திய ஹிந்தி அரசு  தமிழர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை ஆள்வது ராஜபக்சேவோ என்று நமக்கு சந்தேகம் எழுகிறது. மத்திய அரசுக்கு தமிழன் இந்திய குடிமகன் கிடையாது சிங்களவன்தான் இந்திய குடிமகன். இந்தியாவின் பிரதமர் மன்மோகன்  சிங்கா? ராஜபக்சேவா?

No comments: