Dec 25, 2009
இந்தியன் லோக்சபா நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை மிக குறைவு
டெல்லி: மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக அரசு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.14 லட்சம் செலவு செய்கிறது. இந்த தொகை முழுவதுமாக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்துதான் பயன்படுத்தப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வளவு காஸ்ட்லியான இந்த மணித் துளிகள் எந்தளவுக்கு உபயோகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியும்போது, விரக்தியும், வேதனையும், வெறுப்புமே மிஞ்சும். நடந்து முடிந்த (பாதி நாள் தெலுங்கானா தொடர்பான அமளிகளால் வீணாகிப் போனது)
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த ஒரு புள்ளி விவரம்:
நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் கடந்த நவம்பர் 26ம் தேதி லோக்சபாவில் நடந்தது.இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 26 பேர் மட்டுமே. அதிலும், அமைச்சர் சரத் பவார் பேசி முடிப்பதற்குள் மேலும் 5 எம்.பி.க்கள் வெளியே போய்விட்டார்கள். கோரம் எனப்படும் குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்கள் இருந்தால் தான் அவையின் முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கோரம் இல்லாமலேயே அவை நடவடிக்கைகள் நடந்தேறின.
அவையில் மொத்தம் 10 விவாதங்கள் நடந்தன. இவை அனைத்திலும் பங்குபெற்ற எம்.பி.க்கள் 3 சதவீதம் மட்டுமே. குளிர்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் வருகை லோக்சபாவில் 66 சதவீதம், ராஜ்யசபாவில் 68 சதவீதம். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மார்க்சிஸ்ட் எம்.பி.ராஜேஷ், காங்கிரசின் ஏக்நாத் மஹாதியோ கெய்க்வாட், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய 15 எம்.பி.க்கள் மட்டுமே அவைக்கு எல்லா நாட்களும் வந்துள்ளனர்.
95 சதவீதம் வருகை தந்தவர்கள் 45 எம்.பி.க்கள் மட்டுமே. மொத்தம் 440 கேள்விகள் பதிவு செய்யப்பட்டு, 131 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. நவம்பர் 17ம் தேதி கேள்வி கேட்ட 17எம்.பி.க்கள் அவையிலேயே இல்லாத அலங்கோலமும் அரங்கேறியது.கேள்வியே கேட்காத எம்.பி.க்கள் ...காங்கிரசின் விடிவெள்ளி என விமர்சிக்கப் படும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.இந்த கூட்டத்தொடரில் லோக்சபா உருப்படியாக (?) இயங்கியது 106மணி நேரத்திற்கு மட்டுமே. திட்டமிடப்பட்ட மொத்த நேரத்தில் இது 76 சதவீதம். கூட்டத்தொடர் நடந்த 21 நாட்களில், ஆறு நாள், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே அவை நடைபெற்றது. மொத்தம் 26 சட்ட மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. ஆனால், இதில் 14 மட்டுமே நிறைவேற்ற முடிந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு முதல் பணிவிடை செய்வது வரை ஏராளமான ஊழியர்கள், மினரல் வாட்டர் முதல் கரன்ட் பில் வரை எல்லா செலவுகளையும் சேர்த்தால், நாடாளுமன்றம் இயங்க மணிக்கு ரூ.14 லட்சம் தேவைப்படும் என கணிக்கப்படுகிறது.
இந்த வசதிகளை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை இந்த ஆய்வு தெளிவாக தெரிவிக்கிறது.இந்த லட்சணத்தில், நாடாளுமன்ற அமர்வுகளை மேலும் அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் பவன்குமார் பன்சால் அவையில் தெரிவித்திருந்தார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment