Jun 14, 2011

எங்களின் கூடுகள் வன்னியின் பனைமரக்காடுகள் தான்!!

" மனித உரிமை மீறலில் மோசமானது ஊழல்",  ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையிலிருக்கும் பெருச்சாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி இந்த வார்த்தைகள்.

நேற்றைய செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்,  25 நாட்கள் சிறையில் வாடிய கனிமொழியின் ஜாமீன் விசாரணை மீண்டும் தள்ளிப்போகிறது என்பதே.

ஊழல் வழக்கில் சிறை சென்றவள் 25 நாட்கள் சிறையிலிருப்பதையே ஏதோ ஆயுளில் பாதியை சிறையில் தொலைத்த மண்டேலா அளவுக்குப் பேசுபவர்கள் கருத்தில்,  25 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினியின் நிலை படாமல் போனதேன்?

என் மகள் ஒரு மலர் என்று அப்பனும்,  நானும் என் தந்தையும் அழுதோம் என்று மகளும் உணர்வுப்பூர்வமாக பேட்டிக் கொடுத்து,  கேட்பவர் காதில் ஒரு தொட்டியை மாட்டி அதில் மண்நிரப்பி விதைபோட்டு நீர்விட்டு வளர்த்து பூக்கும் பூவை நம் காதில் வைக்கிறாங்கள்.

கனிமொழி ஒரு மலர் என்றால் எங்கள் பெட்டைகள் என்ன கருங்கல்லா இல்லை கருவை முள்ளா?

எப்போது தமிழர்நிலை பற்றிப் பேசினாலும் நான் உண்ணா நோன்பிருந்தேன், ஈழத்திற்கான முதல் ஆதரவுக்குரல் விடுத்தவனே நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் கலைஞரே உம்மைப்பார்த்துக் கேட்கிறோம், 1987 ம் ஆண்டு எம் ஈழமக்களின் கோரிக்ககைகளை முன்னிறுத்தி நீரும் உண்ணாமல் 12 நாட்கள் உறுதியாயிருந்து உயிர்நீத்த எம் ஊரெழு யாழின் தலைமகன் திலீபன் கால்தூசி பெறுவீரா நீர்?

இன்று ஊழலுக்கேதிரான போராட்டம் என்று தேனும் பழச்சாறும் குடித்து ஊரை ஏமாற்றும் கோமாளிகளைப் பார்த்துக்கேட்கிறோம், 1981 ல் தம் தாய்நாட்டின் மீதான பிரித்தானிய ஆளுகையை எதிர்த்து ஐயர்லாந்து சிறையில் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த போபிசாண்ட்ஸ்ன் துணிவு இருக்கிறதா உங்களுக்கு?

" ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தளை " என்பார்கள் அதே கதைதான் இந்திய அரசியல் வியாதிகளுக்கும்.  கருணாநிதியைப் பார்த்து கபடநாடகதாரி என சொல்லும் ஜெயலலிதா... நீங்களும் மறக்க வேண்டாம், தமிழ்நாட்டில் புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றும்,  அடுத்த நாட்டின் இறையாண்மையில் தலையிட மாட்டோம் என்றும் அறிக்கை விட்டவர்தான் நீங்கள்.

இன்று புதிதாய்க் கிளம்பியிருக்கிறது ஓர்பூதம் சிவசங்கர் மேனன் என்ற பேரில்.  இது இத்தாலியப் பேயின் கைப்பாவை! எம் தமிழ்மக்களைக் கொன்றுகுவிக்க ஆயுதமும் அளித்துவிட்டு,  தமிழ் மக்களைக் கொல்லவேண்டும் என்பது இலங்கை அரசின் நோக்கமல்ல என்று நாக்கூசாமல் நடிப்பார்கள்.

பாதுகாப்புப் பிரதேசம் என அறிவித்து மக்களை ஓரிடத்தில் குவித்து பொம்பர்களை ஏவி,  டாங்கிகளைக் கொண்டு நாற்புறமிருந்தும் தாக்கி, மிஞ்சியவர்கள் தஞ்சம் புகுந்த மருத்துவ மனையைத் தகர்த்து,  இன்றும் எம்மக்களை முள்வேலிக்குள் அடைத்துவைத்து விலங்கினும் கேவலமாக நடத்தும் ராஜபக்சேயின் சிங்களத் தீவிரவாதம் இன்று வேட்டவெளிச்ச்ச- மாகியுள்ளது.

இந்த உலகின் ஒவ்வொரு அணுவிலும் நாங்கள்பட்ட உயிர்வதை பதிவாகியுள்ளது. வீசும் காற்றின் அசைவில் எம் மக்களின் உயிர்ப்பிரியும் ஒலியே நிறைந்துள்ளது.  நீங்கள் காணும் வெளிச்சத்தில் இருளில் சிக்கி எல்லாம் இழந்து ஏதிலியாய்ப்போன எம் மக்களின் ஏக்கம் எதிரொளிக்கிறது.

கண்மூடி ஒருநிமிடம் உங்கள் உள்ளத்தைக்கேளுங்கள், உங்கள் கண்களுக்குள் தோன்றும் இருட்டின் ஒவ்வொரு புள்ளியும் சாட்சியம்கூறும் எங்கள் இனம் அழிந்தது இனப்படுகொலையில் என்று.

உலகையே தன் கையில் கட்டியாள்வதாக கெக்கலித்த சர்வாதிகாரிகள் நின்ற இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்ட கதையும்,  அரசியல் சாணக்யர்கள் மக்கள் புரட்சியில் மறைந்து அரசியல் அனாதைகளான வரலாறும் உலக வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

எங்களின் வலிகளைச்சொல்லியே தம்மை வலுவாக்கிக்கொண்ட அரசியல்உலகின் அரசர்களே...!

மறவாதீர் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!", வாழ்வின் இறுதித் தீர்ப்புநாளில் எல்லோருமே அறத்தின் முன் பதில்கூறக் கடமைப்பட்டவர்கள் .

எங்கள் தமிழினம் அழிந்துவிட்டதாக அவசரப்பட்டு அறிவித்து விடாதீர்கள், நாங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை, வலசை போயிருக்கிறோம்.

வாழிடத்தில் சூழல் சரியில்லாதபோது பறவைகள் வலசைபோதல் இயல்புதானே?

எங்கள் வீடுகள் எங்கெங்கு அமைந்தபோதும்,  எங்களின் கூடுகள் வன்னியின் பனைமரக்காடுகள் தான்!! மீண்டு வருவோம்!! மீண்டும் வருவோம்!!
...யாழினி...

5 comments:

Anonymous said...

இந்த கலுசடை அரசியல்வாதிகள் எப்படி ஈழத்தமிழர் விசயத்தில் நாடகம் ஆடினார்கள் என்பதை தெளிவாக சொன்னீங்கள், வாழ்த்துக்கள் யாழினி.

Anonymous said...

பிரமாதம் ரொம்ப அருமை

Anonymous said...

ஆமாம் ஒருநாள் ஈழமக்களின் துயரம் தீரும், தமிழீழம் மலரும், அதுவரை ஓயாமாட்டோம்.

Anonymous said...

சிங்களவர்கள் வந்தேறிகள், தமிழர்கள் பூர்வீககுடிகள், இதை உலகுக்கு பறைசாற்றி தமிழீழம் மீட்போம். உங்கள் பதிவுக்கு நன்றி யாழினி.

Anonymous said...

எங்கள் தமிழினம் அழிந்துவிட்டதாக அவசரப்பட்டு அறிவித்து விடாதீர்கள், நாங்கள் வழக்கொழிந்து போய்விட வில்லை, வலசை போயிருக்கிறோம்.

என் மனதை தொட்ட வைரமான வரிகள் நன்றி யாழினி.