May 14, இன்று விஜயகாந்தை பத்திரிக்கையாளர்கள் அவரது தேர்தல் அலுவுலகத்தில் சந்தித்து கேள்விகளால் துளைத்தனர்.
கேள்வி: இந்தத் தேர்தல் மூலம் தே.மு.தி.க. கட்சி மேலும் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளதாக கருதுகிறீர்களா?
பதில்: 2006ம் ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சிக்கு 8.38 சதவீதமும், 2009ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் 10.25 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.
எம்.பி. தேர்தலின்போது பிரதமர் யார் என்பதைக்கூட கூறவில்லை. தற்போது கிடைத்துள்ள வெற்றி எனக்கல்ல, மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி.
கேள்வி: உங்கள் கட்சி நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக அமருவீர்களா?
பதில்: ஆம் நாங்களே எதிர் கட்சியாக இருக்கும் அளவுக்கு சீட்டுகள் பெற்றுள்ளோம்.
கேள்வி: அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால், ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
பதில்: ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறோமே.
கேள்வி: இந்த தேர்தல் மூலம் என்ன எதிரொலிக்கிறது?
பதில்: விலைவாசி உயர்வு, மின்சார வெட்டு, எங்கும் ஊழல், தி.மு.க.வின் அராஜகம் போன்றவை வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்ற எண்ணத்துக்கும் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இந்த எண்ணத்துக்கு தோல்வி கிடைத்துள்ளது.
கேள்வி: தி.மு.க. ஆட்சியில் சினிமாத்துறையிலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டதே?
பதில்: இதுசம்பந்தமாக ராம. நாராயணன் அல்லது தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுப் பாருங்கள். எனது தரப்பு கருத்தை தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரிடம் கேளுங்கள்.
கேள்வி: இந்த தேர்தல் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
பதில்: மக்களுக்கு நன்றி சொல்கிறேன். விலைவாசி உயர்வு, ஊழல், மின்வெட்டு, அராஜகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி, நிம்மதியான வாழ்க்கையை கேட்டிருக்கிறார்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்கும் எண்ணத்தையும் மாற்றி இருக்கிறார்கள்.
கேள்வி: இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு பின்னடைவா?
பதில்: தி.மு.க.வுக்கும் பின்னடைவு, அவர் குடும்பத்தினருக்கும் பின்னடைவு.
கேள்வி: இந்த தேர்தல் முடிவால் மக்களுக்கு மாற்றம் வருமா?
பதில்: நிச்சயமாக அவர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். ஆனால் ஜீபூம்பா போல் எதையும் செய்ய முடியாது. நன்மைகள் கிடைத்து பிரச்சினைகள் தீர்வதற்கு 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகலாம்.
இவ்வாறு விஜயகாந்த் பதிலளித்தார். நடிகர் வடிவேலு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை விஜயகாந்த் தவிர்த்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment