Mar 14, 2011

சென்னையை தாக்கிய சுனாமி!!

முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் சிபிஐ என்கிற சுனாமி புகுந்தது. ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ அதிகாரிகள்., டிபி ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை காலையிலேயே விசாரிக்கத் தொடங்கினர். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளின் உரிமையாளர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாவும் விசாரிக்கப்பட்டார்.

கனிமொழியை வைத்து தான் 63 தொகுதிகளையும் மிரட்டி வாங்கியது காங்கிரஸ், இப்பொழுது எந்தெந்த வெற்றித் தொகுதிகள் வேண்டும் என்று செல்லமாய் மிரட்டுவதற்காக இந்த சிபிஐ சுனாமி இருக்கலாம், இல்லை உச்ச நீதிமன்றம் போட்ட போடில் சென்னையை முற்றுக்கையிட்டிருக்கலாம் சிபிஐ.

ஆக மொத்தம் உள்ளூரில் ஒருவனை அடிபணிய வைப்பதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் இல்லை என்றால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவார்கள். அது போலத்தான் இங்கு சிபிஐயை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தனது அடியாள் போல் வைத்துள்ளது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து கருணாநிதி ஒரு சுனாமி ஒன்றை டெல்லி நோக்கி அனுப்பினார். சமிபத்தில் சென்னையை கலங்கடித்த சுனாமி காங்கிரஸிடமிருந்து திருப்பி விடப்பட்டது. தமிழுக்காக சாவேன் என்று இடியாய் முழங்கிய தலைவன். மனிதகுல விரோதி ராசபக்சே தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்த போதும் காங்கிரஸுடன் கை கோர்த்து உல்லாசமாய் திரிந்த தமிழ் இனத் தலைவன் தன் குடும்பத்திற்குள் புகுந்த சுனாமியால் இன்று தகர்ந்துபோய் கிடக்கின்றார்.

இனி அடுத்தடுத்து வரப்போகும் சுனாமிகளை நினைத்து நடுங்கி போய் உள்ளார் கருணாநிதி. இது வழக்கமான அரசியல் மோடி வித்தைகள் தான். மற்றபடி இந்தியர்களுக்கு ஊழல் சுனாமிகள் புதுமையானது ஒன்றும் இல்லை, ஜப்பானியர்கள் எப்படி இயற்கை சீரழிவுகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்களோ அதே போல் இந்தியர்களும் தங்களை சூழ்ந்துள்ள ஊழல் சுனாமிகளுக்குள்ளேயே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது இயற்கை பேரழிவு ஏற்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு தான் உலகளவில் பட்டினிச் சாவுகள் அதிகமாக நடைபெறுகிறது. உணவு உற்பத்தியில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் உணவிற்கு பதிலாய் எலிகளை மற்றும் மலத்தை திண்ணும் கொடுமையும் நடக்கிறது.

தொழிற் துறைகளில் முன்னோடியாய் இருக்கும் நம் நாட்டில் தான் வேலையின்மை அதிகமாய் இருக்கிறது. நடுத்தர மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றும் இந்த சமூகத்தில் தான் உலகமே அதியசயக்கும் ஊழல்களும், பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களும் உள்ளது. இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகி கொண்டே வருகிறது. மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது பேரழிவுகள் நிச்சயமாக நடைபெறும்.

இந்தியாவில் சமீபத்திய ஊழல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக ஊழல் அளவு கோல்களில் பதிவாகியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பசி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விரக்தி, ஆதிக்க, அதிகார மையங்களின் வேட்டை, கேலி கூத்தாகும் ஜனநாயக மாட்சிமை என வாழ்கையை சூன்யமாக்கும் பல சுனாமிகளை இந்தியாவும் தினம் தோறும் சந்தித்து வருகிறது.

எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது உறுதி அதற்குள் நாம் இந்த சமூகத்தில் எப்படியான வாழ்கையை நாம் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நம் கடமை.
ஒவ்வொருவருக்குள்ளும் உற்பத்தியாகும் சுனாமி ஒருசேர கொதித்தெழும் பொழுதுதான் சமூகப் புரட்சி எனும் சுனாமி உருவாகும்.

நன்றி : மால்கம்-X ஃபாரூக்

No comments: