Mar 1, 2011

” நீ நிறுத்தறீயா!! நான் நிறுத்தறேன்!! ரவுடிகளின் சவால்!!

பச்சையப்பன் கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

பிப்ரவரி 23-ம் தேதி எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள், ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன் திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது. கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக் கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். உடனே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். இதற்க்கு போலீஸ் இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது. ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன்? கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்.

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத் தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள் ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப் போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச் சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டு கொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப் போகின்றதா என்ன?

நன்றி:வினவு, நன்றி: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு), சென்னை

4 comments:

Anonymous said...

but once in few years police comes inside the campus, even when i studied there in 1980.

பாத்திமா ஜொஹ்ரா said...

உங்கள் தளம் வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளது.

PUTHIYATHENRAL said...

இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், இங்கே செய்திகளாக வெளியிடபடுகிறது. இன்று பத்திரிக்கை துறை என்பது அதிகாரவர்க்கத்திடமும், பாசிசவாதிகளின் கைகளிலும் சிக்கி இருகின்ற காரணத்தால் உண்மை செய்திகள் மறைக்கப்படுகின்றன. இங்கு வெளியிடபடும் செய்திகள் அனைத்தும் நடந்த சம்பவங்களே! இதில் வன்முறையை தூண்ட ஒன்றும் இல்லை. நடந்த சம்பவங்களே இங்கு எழுதப்படுகிறது. நீங்கள் எழுதியதை படித்தே வன்முறை என்று சொல்கிறீர்கள் இதை அனுபவித்தவர்களுக்கு இது எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும். இது எல்லாம் இங்கு ஏன் வெளியிடப்படுகிறது என்றால்? இது போன்ற வன்முறைகள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதும், மக்களை விழிப்புணர்வு அடியச்செய்ய வேண்டும் என்பது ஒன்றுதான் நோக்கமே தவிர இதில் எந்த சுயலாபமும் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். வெறும் வாயால் அமைதி, அமைதி, அமைதி என்று சொல்வதால் அமைதி வந்துவிடாது. எதுவெல்லாம் அமைதியை குலைக்க கூடியது என்பதை உணரவேண்டும், உணர்த்தவேண்டும். எழுத்து போராட்டம் என்பது ஒரு அமைதி போராட்டம்தான் இது ஒன்றும் வன்முறை இல்லை. உங்களது கருத்துக்கு நன்றி. உங்களது கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

எகிப்தில் நடந்த புரட்சிக்கு வித்திட்டதே ஒரு பெண்தான் என்ற செய்தியும் படித்துள்ளேன். அவர்களை பார்த்து நாம் வன்முறையாளர் என்று சொல்லமுடியாது. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பெரும்பான்மையினர் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அராஜகம். போலீஸ் அராஜகத்தை நியாப்படுத்த முடியாது.