நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சித்ரவதைக் கூடங்கள் நடத்தப்படுகிற 2 முகாம்களும் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு, மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்தில் அங்கு தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும், பூந்தமல்லியில் 4 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளது. பூந்தமல்லி முகாம் அமைந்துள்ள இடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கான உயர் பாதுகாப்பு சிறையாக இருந்த இடமாகும்.
முகாமினைச் சுற்றிலும் மதில் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. வெயிலோ பெரு மழையோ, குளிரோ அப்படியே உள்ளே இருப்பவர்களைப் பாதிக்கிறது. முகாமினைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் காவலர்கள் மற்றும் உளவுத்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லியில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த அவல நிலை தொடராமல் இருக்க நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த மாத இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப்பூட்டும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்.Share 0
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment