புதுதில்லி, பிப்.22- போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை நீடிக்கிறது. மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகளை வலியுறுத்தி இன்று தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், வாசுதேவ் ஆச்சாரியா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சோதனை நிலையில் உள்ள மருந்துகள் தங்களுக்கு வழங்கப்படுவதாகவும், தவறான அடையாள அட்டைகளை பயன்படுத்தி விஷவாயுவில் பாதிக்கப்படாதவர்களும் முறைகேடாக உதவிகள் பெறுகின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சார்பில், பிரதமரிடம் ஒரு மனுவும் அளிக்கப்பட்டது. அதில், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தங்கள் கோரிக்கைகளை அரசு விரைந்து பரிசீலித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் ஹைலைட் செய்தி என்னவென்றால்: விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்பட வில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான இந்தவழக்கில் ஆண்டர்சன் ஒருமுறை கூட விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment