Jan 6, 2011

வங்கியில் நூதன கொள்ளை!!!

அர்ஜென்டினா : வங்கிக்கு அடியில் 30 மீட்டர் தூர சுரங்கப் பாதை தோண்டிய திருடர்கள், வங்கியில் 150 லாக்கர்களை கொள்ளையடித்து சென்றனர். அர்ஜென்டினாவில் அந்நாட்டு ஸ்டேட் வங்கிக் கிளை, பெய்னோஸ் ஏர்ஸ் நகரில் உள்ளது. பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள அந்த வங்கியை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு திங்களன்று அதிகாரிகள் திறந்தனர். உள்ளே பாதுகாப்பு அறைக்கு சென்றபோது, யாரும் உள்ளே வந்து சென்ற சுவடே தெரியாமல் 150 லாக்கர்கள் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த பல கோடி பணம், நகைகள் கொள்ளை போயிருந்தன.

போலீசுக்கு புகார் போனது. அவர்கள் சோதனை நடத்தியதில் வங்கியின் முன்கதவோ, சுவர்களிலோ உடைத்ததற்கான அறிகுறி இல்லை. எனவே, துப்பு கிடைக்காமல் திணறினர். லாக்கர் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசித்தனர். அப்போது ஒரு இடத்தில் நடக்கும்போது சத்தம் வித்தியாசப்பட்டது. உடனடியாக அந்த இடத்தை தோண்டினர். அங்கு பக்காவாக ஒருவர் நடமாடும் அளவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் இறங்கி போலீசார் நடந்தனர். கால் கி.மீ. தூரத்துக்கு மேல்(30 மீட்டர்) நடந்த பிறகே சுரங்கம் முடிந்தது. ஏறிப் பார்த்தபோது மற்றொரு கட்டிடத்துக்குள் இருந்தனர்.

அந்த கட்டிடம் வெறிச்சோடி காணப்பட்டது. விசாரித்ததில் கடந்த ஜூன் மாதத்தில் 3 பேர் அந்தக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது. அப்போது முதல் 6 மாதங்களாக கட்டிடத்துக்குள் இருந்தபடி வங்கி வரை சுரங்கம் தோண்டி கொள்ளை அடித்தது தெரிய வந்தது. சுரங்கத்தின் முழு தூரத்திலும் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள், காற்றோட்டத்துக்கு மின் விசிறிகள், காற்றை வெளியேற்ற எக்சாஸ்ட் ஃபேன்கள் என்று கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன.

அந்த 3 திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஸ்டேட் வங்கியில் உள்ள 1,408 லாக்கர்களில் கொள்ளை போன 150 லாக்கர்கள் யாருடையது எனக் கேட்டு வங்கியை வாடிக்கையாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாததால், வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரங்கம் தோண்டி வங்கிக் கொள்ளை நடப்பது அர்ஜென்டினாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: