Jan 28, 2011

இலங்கை பயங்கரவாத அரசு வெள்ளை வேன் மூலம் ஆள் கடத்தல் அம்பலம்..

கொழும்பு, ஜன.28- இலங்கையில் சமீபகாலமாக வெள்ளை நிற வேனில் வந்து முக்கியமான ஆள்களை கடத்தியது போலீஸாரின் ஒரு பிரிவினரே என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் முக்கிய நபர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் ஆகியோரை திடீரென வரும் வெள்ளை வேன் கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதாக புகார் கூறப்பட்டு வந்தது.

இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச உத்தரவின் பேரில், காவல்துறையின் ரகசியப் பிரிவினர் தான் இத்தகைய ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெரேரா என்னும் காவல்துறை ஆய்வாளர்தான் வெள்ளை நிற வேனில் வரும் கும்பலுக்குத் தலைவராக செயல்பட்டுள்ளார். அவரது குழுவில் 3 காவலர்களும் ஒரு அதிகாரியும் இயங்கி வந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் ஆவணங்கள் இல்லாத அதிநவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ரகசிய பிரிவினருக்கு ராணுவத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கட்டளை அதிகாரியாக செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெள்ளை வேனில் வந்த கும்பல் அதிபரின் முன்னாள் ஊடக அதிகாரி அஷ்ரப் அலியையும் அவரது குடும்பத்தினரையும் கடத்த முயன்றனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த கடத்தல் முயற்சி தோல்வி அடைந்ததால் வெள்ளை வேன் ரகசியம் அம்பலப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அஷ்ரப் அலி இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments: