Dec 30, 2010

டாக்டர் பினாயக் சென் விடுவிக்கப்பட வேண்டும்: வைகோ.

சென்னை : "சட்டீஸ்கரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, மனித நேயர் டாக்டர் பினாயக்சென் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற பினாயக் சென், மருத்துவ வசதி பெற முடியாமல் ஏழ்மையில் தவிக்கும் பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி கொள்ளையடிப்பதால், மாவோயிஸ்டுகள் போராட்டம் தீவிரம் ஆனது. இதன் தலைவர்களில் ஒருவரான நாராயண் சன்யாளுக்கு வயது 74. அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் வாடுவதை அறிந்த பினாயக்சென், சிறையில் சந்தித்தார்.

நாராயண் சன்யாள் தனது உடல் நலம் குறித்து நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தை பினாயக்சென் சிறைக்கு வெளியில் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், புரட்சியை தூண்டுவதாக போலீசாரே பொய்யாக கடிதம் தயாரித்து பினாயக் சென் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். நாராயண் சன்யாலுக்கும், பிஜிகுகா என்பவருக்கும், டாக்டர் பினாயக் சென்னுக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய மத்திய அரசு அவரை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: