Jul 31, 2010

மெக்சிகோ வளைகுடாவில் எற்பட்ட எண்ணெய் கசிவு: பிரிட்டிஷ் பெட்ரோலியம் நஷ்டஈடு தரவேண்டும் பரக் ஒபாமா.

லண்டன்,ஜுலை31:அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் கிணற்றின் வாய்பகுதியில் கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன.அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந்நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார்.மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

No comments: