Jul 5, 2010

இன்று கரும்புலிகள் தினம்: 'விடுதலைப் பயணம் தொடரும்'-புலிகள் அறிக்கை.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 ஜூலை 5ம் நாள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த ராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும் இது.

அந்தத் தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை தமிழீழத்தின் புதல்வர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். காலங்காலமாக எதிரியின் குகைக்குள்ளேயே உலவி, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவாமல் தமது கடமையை செய்த அற்புத மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் புகழ் மயக்கம் இல்லாமலே தம்மை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

''பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனால் விழிக்கப்படுகின்றமையின் அர்த்தத்தின் ஆழம் பற்றி நாம் உணர்வோம்.எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.

இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்பதித்திருக்கும் இலங்கையின் கொடிய கரங்களினால் எமது மக்கள் படும் துன்பங்களை எல்லாம் எமது கொள்கையில் மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த சிங்கள தேசத்துக்கு விரைவில் தமிழீழ மக்கள் பதில் கொடுப்பார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப் பயணம் தொடரும். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ள தொழிலதிபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்புக்களை கையகப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு அந்த தொழிலதிபர் நிதியுதவி செய்தார் என்று இலங்கு உளவுப் பிரிவுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந் நிலையில் புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உளவுப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 8,000 பேர் வரை சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

No comments: