Apr 7, 2010

தனது கையில் இரத்தக் கறையுடன் ஏனைய நாடுகளை குற்றஞ்சாட்டுவதா? அமெரிக்காவைச் நோக்கி கேள்வி எழுப்பும் இலங்கை

ஈராக்கில் அமெரிக்க விமானம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரு பத்திரிகையாளர்கள் உட்படக் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து அமெரிக்காவை இலங்கை கடுமையாகச் சாடியுள்ளது. தனது கரங்களிலேயே இரத்தக்கறையை வாஷிங்டன் கொண்டிருப்பதாக கொழும்பு கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையை அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருவதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகத் திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்து வருகிறது. அதேசமயம், ஈராக்கில் தங்களின் சொந்த விவகாரங்களை அவர்கள் வசதிக்கேற்ப மறந்து விட்டதாக தென்படுகின்றது என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல டெய்லிமிரர் இணையத் தளத்திற்குக் கூறியுள்ளார்.

அதேசமயம், வளர்ந்து வரும் நாடுகள் மீது சுட்டுவிரலை நீட்டுவதற்கு முன்னர் (குற்றச்சாட்டைத் தெரிவிப்பதற்கு முன்) தனது படைகளின் நடத்தை தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் ரம்புக்வெல அழைப்பு விடுத்துள்ளார்.உலகின் வல்லமை வாய்ந்தவை என்று அழைக்கப்படுபவையே இவையாகும். அவை எப்போதுமே வளர்ந்துவரும் நாடுகளைப் பயப்படுத்தி வருகின்றன. ஆனால், தமது சொந்தக் கரங்களில் இரத்தம் இருப்பதை அவை அலட்சியம் செய்து வருகின்றன. இது புதிய விஷயமல்ல. பல வருடங்களாக இது நடைபெறுகிறது.

நாங்கள் குற்றம் இழைத்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஈராக்கில் என்ன நடந்ததென்பதை நாம் யாவரும் அறிவோம் என்றும் ரம்புக்வெல தெரிவித்தார்.அத்துடன், வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல ஐ.நா. இது தொடர்பாக மௌனமாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.
ஈராக்கில் அமெரிக்காவின் சம்பந்தம் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நா.செயலாளர் நாயகம் ஏன் நியமிக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்குலகும் ஐ.நா.வும் இலங்கைக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை விடுத்து வருவது தொடர்பான நம்பகத்தன்மை குறித்து இலங்கை அரசு எப்போதும் கேள்வி யெழுப்புவதற்கான காரணமும் இதுதான் என்றும் ரம்புக்வெல சுட்டிக் காட்டியுள்ளார்.2007 ஜூலை 12 இல் பாக்தாத்திற்கு அருகே அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான 'விக்கிலீக்ஸ்' வீடியோவொன்றை வெளியிட்டிருந்தது.

No comments: