Apr 7, 2010

துபையின் புர்ஜ் கலீஃபாவின் சாதனையை முறியடிக்கும் புர்ஜ் முபாரக் அல் கபீர் கட்டிடம்.


சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே என்பதற்கேற்ப, உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்த 509 மீட்டர்கள் உயரம் கொண்ட தைவான் நாட்டின் தாய்பே கட்டிடத்தின் சாதனையை, கடந்த ஆண்டு துபையில் திறக்கப்பட்ட 828 மீட்டர்கள் உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டிடம் முறியடித்தது. தற்போது புர்ஜ் கலீஃபாவின் சாதனையை முறியடிக்கும் முகமாய் புர்ஜ் முபாரக் அல் கபீர் கட்டிடம் 1001 மீட்டர் உயரத்தில் கட்டப்பட இருக்கிறது.

குவைத்தில் உள்ள சுபியா என்ற பகுதியில் சுமார் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மதீனத் அல் ஹரீர் (பட்டு நகரம்) என்ற பெயரில் புதிய நகர்ப்புறப் பகுதி உருவாக்கப்பட உள்ளது. புதிய விமான நிலையம், வணிக வளாகங்கள், வசிப்பிடங்கள், விளையாட்டு நகர்கள், மருத்துவப் பகுதிகள், கல்விச் சாலைகள் மற்றும் தொழிற் கூடங்கள் என அனைத்தும் அமைய உள்ள இந்த நகரில்தான் புர்ஜ் முபாரக் அல் கபீர் அமைய உள்ளது.
இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த 5ம் தேதி திங்கள் கிழமை அன்று கையெழுத்தாகி உள்ளது.

புகழ்பெற்ற அரேபியக் கதையான "ஆயிரத்து ஓர் இரவுகள்" என்ற கதையைப் பிரதிபலிக்கும் வண்ணம் 1001 மீட்டர்கள் (1 கிலோ மீட்டர்) உயரத்தில் கட்டப்படவுள்ள புர்ஜ் முபாரக் அல் கபீர் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமையும். இந்தக் கட்டிடத்தில் இருந்து கடல் மார்க்கமாக சுமார் 23.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைத்து குவைத் நகருடன் இணைக்கப்படும்.மதீனத் அல் ஹரீர் திட்டத்தின் ஒரு பகுதியாய் இந்நகருக்கு அருகில் உள்ள குவைத்தின் மிகப்பெரும் தீவான பூபியான் தீவில் துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.மதீனத் அல் ஹரீர் திட்டம் 2005ஆம் ஆண்டு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் வரைபடம் 2006, மார்ச் 30ஆம் நாள் வெளியிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் குவைத் அரசு இத்திட்டத்திற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கியது. 2016ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதீனத் அல் ஹரீர் திட்டத்தின் மொத்தச் செலவாக 94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமாராக 4...இலட்சம்...கோடி இந்திய ரூபாய்கள்) மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் புர்ஜ் முபாரக் அல்கபீர் கட்டிடத்திற்கான செலவாக 7.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் முதல் பகுதியாக 405 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பூபியான் துறைமுகத் திட்டத்திற்கான ஒப்பந்தம் திங்கள் கிழமை (05-04-2010) அன்று கையெழுத்தானது. சைனா ஹார்பார் என்ற சீன நிறுவனத்தின் தலைமையில் மூன்று நிறுவனங்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ளும். பூபியான் துறைமுகத்தில் இருந்து குவைத் நகரை இணைக்கும் 35 கிலோ மீட்டர் தூரமுள்ள பாலம் அமைக்கும் பணியும் இத்திட்டத்தில் உள்ளதாக குவைத் பொதுப் பணித்துறை அமைச்சர் மூசா அல் சர்ராஃப் கூறியுள்ளார்.
மதீனத் அல்ஹரீர் திட்டத்தின் மற்ற கட்டப் பணிகளுக்கான வரைவை பொதுப் பணித்துறை அமைச்சகம் இறுதி செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments: