Apr 19, 2010

மாவோயிஸ்ட் விசயத்தில் சிதம்பரத்தை விமர்சிக்கிறார் திக்விஜய் சிங்.

மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை ஒடுக்க இந்திய அரசு கையாளும் அணுகுமுறை தொடர்பாக பல்வேறுவிதமான கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்தப் பிரச்சினையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் கையாளும் விதம் குறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவோயிஸ்ட் பிரச்சினையில் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ள நிலையில், திக்விஜய் சிங் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சிதம்பரம் மிக மிக இறுக்கமாகவும், அறிவுப்பூர்வமன இறுமாப்புடனும் இருப்பவர் என்று திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரை உள்ளடக்கிய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் திக்விஜய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது மாவோயிஸ்டுகள் பிரச்சினையை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டு, பழங்குடி மக்களின் பிரச்சினையாகக் கருதி கையாள வேண்டும் என சிதம்பரத்துக்கு திக்விஜய் சிங் அறிவுரை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாத சிதம்பரத்தின் அணுகுமுறையுடன் நான் முரண்படுகிறேன் என்று திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments: