Apr 20, 2010

எஸ்.டி.பி.ஐ நடத்தும் ‘மகளிர் பாராளுமன்ற அணிவகுப்பு பேரணி’.


ஆலப்புழா:மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் சிறுபான்மை,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடுச் செய்யவேண்டும் எனக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வருகிற மே மாதம் 13-ஆம் தேதி பாராளுமன்றத்தை நோக்கிய மகளிர் அணிவகுப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் ஆலப்புழையில் முடிவடைந்த தேசிய செயல் கமிட்டியில் இதுத்தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுத்தொடர்பாக கூட்டம் முடிவடைந்த பின்னர் எஸ்.டி.பி.ஐயின் தேசியத்தலைவர் இ.அபூபக்கர் கூறியதாவது:"எஸ்.டி.பி.ஐயின் மகளிர் தலைவர்களுடன் நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், தலித்துகள், அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்வர். மேலும் ஜன்ந்தர் மந்தரில் தர்ணாவும் நடத்தப்படும். இதன் முடிவில் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து துவக்கத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் போதிய உள் ஒதுக்கீட்டை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மகளிருக்கு வழங்கக்கோரும் மனு ஒன்றை அளிக்கும்.

இப்போராட்டம் இப்பிரச்சனையில் எஸ்.டி.பி.ஐ வருகிற செப்டம்பர் மாதம் மேற்க்கொள்ளவிருக்கும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்கமாக இருக்கும். இம்மகளிர் மசோதா சிறுபான்மையின, எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி சமூகத்தினரின் எண்ணிக்கையை அதிகார சபைகளில் குறைப்பதற்கான சதித்திட்டமாகும். உயர்ஜாதியினரின் அரசியல் கட்சிகள் இம்மசோதாவை ஆதரித்ததன் மூலம் அவர்களுடைய சதித்திட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய செயல் கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
1.ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.குஜராத்தில் தலித்துக்களுக்கு எதிராக நடைபெற்ற அராஜகங்களைக் குறித்து வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறோம்

3.மேற்கு வங்காளத்தில் ஆளும் இடதுசாரிக்கூட்டணி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், இஸ்ரேலிய தூதரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4.நடைபெற்றுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாரபட்சமின்றி அனைத்து இந்தியர்களையும் உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

தேசிய செயல் கமிட்டிக்கூட்டத்தில் ராஜஸ்தானின் எஸ்.டி.பி.ஐ தலைவர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

No comments: