Apr 2, 2010

கர்கரேயின் கவச உடை ஏகே47 குண்டுகளை தடுக்கக்கூடியவை அல்ல - மகாராஷ்டிர அரசு

மும்பை:கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய போது அதை எதிர்த்து போராடிய போலீசார் அணிந்திருந்த கவச உடைகள் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகளை தாங்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கர்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கர்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கர்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கர்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.

ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கர்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

No comments: