Jan 4, 2010

நதி நீர் பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்

இஸ்லாமாபாத்,ஜன.3: நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் பிரச்னையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என்றார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸத் கிலாயின் ஆலோசகர்.பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய நதி நீரை இந்தியா தொடர்ந்து திருடி வருகிறது. இந்த போக்கை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் போர் தொடுக்கவும் பாகிஸ்தான் தயங்காது என்றும் சர்தார் ஆசிப் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூசுப் ரஸத் கிலானியின் ஆலோசகரும், பாகிஸ்தான் திட்டக்கமிஷன் துணைத் தலைவருமான சர்தார் ஆசிப் அலி லாகூரில் சனிக்கிழமை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கண்டவாறு எச்சரித்தார்.

இரு நாடுகளுக்கு பொதுவான நதி நீரை மையமாக வைத்து இந்தியா இனிமேலும் அணைகளைக் கட்டக்கூடாது. அவ்வாறு கட்டினால் அது பாகிஸ்தானை பாதிக்கும். இனிமேலும் இந்தியா அணைகளை கட்ட முயற்சித்தால் நாங்கள் பன்னாட்டு நீதிமன்றத்திடமோ, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமோ முறையிட வேண்டியதிருக்கும்.

இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்டுள்ள சிந்து நதி ஒப்பந்தத்தில் இருந்தும் விலகிக் கொள்வோம். இதையடுத்து ஏற்படும் பின்விளைவுகளுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான நதி நீர்ப் பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமாக பேசுவதால் தீர்ந்துவிடாது. சிந்து நதி நீர் உடன்படிக்கை வழி நின்று பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் முனைய வேண்டும். அதுவே பலன் அளிக்கும் என்றும் சர்தார் ஆசிப் அலி தெரிவித்தார்.

No comments: