Dec 7, 2009
லிபர்ஹான் கமிசன்: பாராளுமன்றம் கொந்தளிப்பு
புதுடெல்லி:லிபர்ஹான் கமிசன் அறிக்கைத்தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் சூடு பறந்தது. மதியம் இரண்டரை மணிக்கு ஆரம்பித்த விவாதம் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டியதுடன் முடிவுற்றது.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் பங்கை சுட்டிக்காட்டி இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான குருதாஸ் குப்தா விவாதத்தை துவக்கிவைத்தார். மகாத்மா காந்தியைக்கொன்றவர்கள்தான் பாப்ரியை தகர்த்தார்கள் என்று குப்தா குற்றஞ்சாட்டினார். மதவெறியர்களை வலுப்படுத்துவதற்கான நன்கு திட்டமிடப்பட்டதாகயிருந்தது பாப்ரி மஸ்ஜிதை பற்றிய பிரச்சாரங்கள் என்று குப்தா கூறினார். மேலும் அவர் கூறுகையில், "நன்கு திட்டமிடப்பட்டுதான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததை தடுத்திருக்கலாம். தற்போது அதனை இடித்தவர்களை ஏன் சிறையிலடைக்காமலிருக்கின்றீர்கள்? அரசியல் கட்டமைப்பு ஏன் இவ்விஷயத்தில் தோல்வியைத் தழுவியது? மஸ்ஜிதை தகர்த்ததற்கு தற்பொழுதும் அத்வானி பெருமைப்படுகின்றாரா?" என்று கேள்வியெழுப்பிய குப்தா பாப்ரி மஸ்ஜிதை பாதுகாப்பதற்கு நரசிம்மராவ் அரசு ஒன்றும் செய்யவில்லை என்றார்.
விவாதத்தில் பங்கெடுத்த தீவிரவாத பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "லிபர்ஹான் கமிசன் பொய்களின் மொத்த உருவாக்கம். அயோத்தியா ஸ்ரீராமன் பிறந்த இடம். ராமர்கோயில் கட்டும் பணியிலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. இதனை எப்படி பாப்ரிமஸ்ஜித் என்று கமிஷன் குறிப்பிடமுடியும்? கமிசன் ராமஜென்மபூமி-பாப்ரிமஸ்ஜித் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். கமிசனின் கண்டறிந்தவை பொய்யானவை. மக்களின் உணர்ச்சிகள்தான் பாப்ரிமஸ்ஜிதின் இடிப்பிற்கு பின்னால் உள்ளது. 1936க்கு பிறகு அங்கு மஸ்ஜித் இல்லை. விசாரணைக்கு 17 வருடங்களை எடுத்தபிறகும் கமிசனால் உண்மையை கண்டறிய இயலவில்லை. சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் கவுரத்தை சீர்குலைக்கவே இது பயன்படுத்தப்படுகிறது. லிபர்ஹான் ஒருமுறை கூட அயோத்திச்சென்று பார்வையிடவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்நாத் உரையாற்றும்போது இடையில் காங்கிரஸ்-சமாஜ்வாடி உறுப்பினர்கள் தலையிட்டனர். ராஜ்நாத் சிங் உரையில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், "அயோத்தியில் இடம் சர்ச்சைக்குரியது என்றும் அங்கு யாருக்கு வணங்குவதற்கான சுதந்திரம் உள்ளது என்பது உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது என்றும் கூறினார். சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்துக்கூறுவதை தவிக்கவேண்டும் லிபர்ஹான் கமிசன் நியமிக்கப்பட்டது மஸ்ஜித் எவ்வாறு தகர்க்கப்பட்டது என்பதை ஆராயவே!ஆகவே அது பற்றி மட்டுமே பேசவேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
பாப்ரியை தகர்த்ததில் வாஜ்பாயும் பங்காளிதான். பாப்ரியை தகர்ப்பதற்காக நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் வாஜ்பாய் பங்கெடுத்திருந்தார் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயாம் சிங் யாதவ் தெரிவித்தார். லிபர்ஹான் கமிசன் பாதி உண்மைகளை மட்டுமே வெளிக்கொணர்ந்துள்ளது. தற்போது காங்கிரசில் அங்கம் வகிக்கும் சங்கர்சிங் வகேலா, சஞ்சய் நிரூபம் ஆகியோருக்கும் பாப்ரியை தகர்த்ததில் பங்கில்லையா? என்று முலாயம்சிங் கேள்வியெழுப்பினார்.
பாப்ரி மஸ்ஜிதை பாதுகாத்திருந்தால் இந்தியாவின் மத நல்லிணக்கத்தை பாதுகாத்திருக்கலாம். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நரசிம்ம ராவும் குற்றவாளிதான். இவ்வாறு முலாயம்சிங் யாதவ் உரையாற்றினார்.
விவாதம் துவங்குவதற்கு முன்பு பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் அரசியல் காழ்ப்புணர்வுகளை மாற்றிவிட்டு விவாதிக்கக்கூடிய விஷயம்தான் பாப்ரி மஸ்ஜித் என்று உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். விவாதம் இன்றும் தொடரும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment