பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது. லிபரான் கமிஷனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறுபத்தெட்டு குற்றவாளிகளையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜித் இடிப்புச்சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை லிபரான் அறிக்கை சுட்டி காட்டியது. லிபரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம். அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.
கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. 2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகள் காரணமாக நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிலும் அதனை தொடர்ந்து பிரிட்டனிலும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாபரி மஸ்ஜித் உடனடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும், இடிப்புக் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் முன்னணி சமூகநல அமைப்பான இண்டியன் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் யு.எஸ்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர். ஹைதர்கான் இது குறித்து விடுத்த அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
source:inneram
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment