Dec 17, 2009

இந்தியாவில் செயல்படாத நீதிதுறை: 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நிலுவை


நாடுமுழுவதும் 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டாக்டர் எம் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் வீரப்பமொய்லி கூறியதாவது.

இவ்வாண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று உள்ளபடி, நாடுமுழுவதும் நீதிமன்றங்களில் 3கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுள் விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்ட 31.01 லட்சம் வழக்குகளில் 25.07 லட்சம் வழக்குகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் வருடத்திய கிராம நியாயாலயா சட்டத்தின் கீழ், கிராம நீதிமன்றங்கள் அமைப்பது இவ்வாண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது. இந்த நீதிமன்றங்களில் தீர்த்துவைக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மைய அளவில் பராமரிக்கப்படவில்லை.

நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. உச்சநீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.

2. நீதிமன்றங்களில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விரைந்து தீர்க்கவும் நீதிமன்ற நடைமுறைகளை மேம்படுத்தவும் சில சட்ட நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல். அந்த வகையில் சிவில் மற்றும் கிரிமினல் நடைமுறை சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

3. சமரசம் போன்ற பிற வழிகளில் வழக்குகளை தீர்க்க ஊக்கப்படுத்துதல்.

4. சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பொதுவான பிரச்சினைகளை உள்ளடக்கிய வழக்குகளை ஒன்று சேர்த்தல்.

5. நீதிமன்றங்களை கணினி மயமாக்குதல் மூலமாக நீதிமன்ற உள்கட்டமைப்பை நவீனமாக்கும் நடவடிக்கைகள்.

இது தவிர்த்து சிறந்த முறையில் நீதி வழங்குவதை உறுதிசெய்ய நீதிவழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய ஆணையத்தை ஏற்படுத்த கொள்கை அளவில் அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு திரு வீரப்பமொய்லி கூறியுள்ளார்

No comments: