Oct 3, 2009

உன்னைப்போல் ஒருவன் திரைக்காவியம்



ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் இழிவூபடுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

"குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம்.
ஒண்ணுக்கே… இதுல யுகங்கள் தோறுமா?

ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.

No comments: