Jun 24, 2012

கூகுளின் புது முயற்சி! மொழி கலாச்சாரம் பண்பாட்டுக்கு!!


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இணையதளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இது குறித்து,  ‘’உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமான மொழிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மொழிகள் வழக்கொழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 100 ஆண்டுகளில் அழிந்தேபோய்விடும். 

மொழிகள் அழிந்தால் ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசார பெருமை, பண்பாட்டு சிறப்புகளை எதிர்காலம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை தடுக்கும் நோக்கில்தான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சில மொழிகளை ஒரு சிலர் மட்டுமே பேசிவருகின்றனர். அவர்கள் காலத்தோடு அந்த மொழி அழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்த மொழியின் வீடியோ, ஆடியோ பதிவுகள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும். அதை பார்ப்பவர்கள் அந்த மொழி பற்றி தெரிந்துகொண்டால் அந்த மொழி அழியாமல் இருக்கும்’’என்று கூறியுள்ளனர்.

No comments: