AUG 07, வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விலையுயர்ந்த மரங்கள் இராணுவத்தினரால் சூறையாடப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் பகுதியில் வீடமைப்புத் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் நிறுவனத்திற்காக தமிழ்ப் பகுதிகளிலிருந்து இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டு தெற்கு நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன.
மக்கள் குடியிருக்கும் வீடுகளிலிருந்தே இவ்வாறான மரங்கள் வெட்டப் படுகின்றன. பாரிய அளவில் நடைபெறும் இந்தச் சூறையாடலில் தமிழ் முகவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடருமானால் வடகிழக்கில் பருவகாலமழை வீழ்ச்சி அருகிப்போவதற்கான அபாயம் காணப்படும் என்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வவுனியா பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் தொடர்ச்சியில் நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது
இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது
படிப்பதற்கு சாதாரண செய்தி போலத் தோற்றமளிக்கும் இந்த விடயம் தான் இலங்கை பேரினவாதத்தின் அடிவேர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்?
எண்ணெயின் சாபம் உலகின் பலநாடுகள் வல்லரசுகளால் அடிமைப்படுத்தப் பட்டதன் காரணம் தடுப்பாரில்லாமல் அவற்றின் எண்ணெய்வளத்தைச் சுரண்டவேண்டும் என்பதே. பயங்கரவாதத்தை ஒழிக்கிறேன் என்றபேரில் ஈராக்கியப் பழங்குடி மக்களை அவர்களின் தாய்பூமியிலிருந்து துரத்தியடித்து, லிபிய மண்ணிலும் கால்பத்தித்த எண்ணெய் உறிஞ்சிகள் தான் இலங்கை யையும் விழுங்க முனைகின்றன.
போர் முடிந்துவிட்டது, புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர். இனி தமிழர்கள் சுதந்திரமாக வாழலாம் என்று அறிவிக்கும் இலங்கை அரசு மீள்குடியமர்த்தலில் தாமதம் செய்வது ஏன்? ஏனெனில் உண்மையான யுத்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. மீன்வளம் மிகுந்த பகுதியும் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட மன்னார் பகுதியும், இயற்கை வளமிகுந்த தமிழர் குடியிருப்புப் பகுதிகளும், மலையகப் பகுதிகளையும் தன்வசப்படுத்திக்கொள்ள இலங்கைப் பேரினவாதம் செய்த சூழ்ச்சியே, புலிகளின் மீதான யுத்தத்தைக் காரணம் காட்டி தமிழ் மக்களை வசிப்பிடங்களிலிருந்து மாற்றி கற்காடு களான முள்வேலி முகாம்களில் அடைத்துவைத்தமை. இந்த விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளது.
1994 ல் மஹிந்த அமைச்சராக இருந்தபோது மீன்பிடி முறைகளில் கொண்டு வந்த முன்னேற்றங்களின் காரணமாக மீனவ நண்பன் என்ற பெயர் ஏற்பட்டது. அதுவரை கட்டுமரம், தோணிகள் போன்றவற்றில் மீன்பிடி செய்துவந்த அம்பாந்தோட்டை, கள்ளி பகுதிகளைச்சேர்ந்த சிங்கள மீனவர்களின் எல்லை புட்டாலம், மன்னார் என நீண்டது. அங்கு பூர்வீகமாய் வசித்துவந்த எம் இன மக்களின் வாழ்வில் மண் விழுந்தது. சிறீ லங்காவின் நிலவியல் வரைப் படத்தைப் பார்ப்போருக்கு வளமான பகுதிகள் அனைத்தும் தமிழர் வசமிருந்ததை உணரமுடியும்.
இயற்கை வளமும், பண்பாட்டு நலமும் சிறக்க வாழ்ந்துவந்த எம் மக்களின் மீது சிங்களப் பேரினவாதம் கொண்ட காழ்ப்புணர்ச்சியே இன்றைய இன அழிப்பு. எம் மக்களை அழித்தும் அகதியாக்கியும் கைப்பற்றப்பட்ட தமிழர்ப் பகுதிகளுக்கு தற்போது சிங்கள சாயம் பூசப்பட்டு வருகிறது. அழகு தமிழ்ப் பெயர்களில் பொலிந்த எம் தெருக்களுக்கும ஊர்களுக்கும் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. தமிழ்க் குடும்பங்கள் வசித்துவந்த பகுதிகளில் கூட்டங்கூட்டமாக சிங்களர்கள் குடியமர்த்தப் படுகின்றனர்.
தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்படுகின்றனர் எனில், முள்வேலிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களின் நிலை?
முள்ளிவாய்க்காலில் நடந்தது போல, முகாம்களில் தினந்தினம் படுகொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கேட்பாரின்றி இன்றும் எம் மக்கள் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்படுகின்றனர். தமிழர்களாகிய நாம் இதனை உணரவேண்டும். நம் மக்களைக் காக்கவேண்டியவர்கள் ஐக்கிய நாடுகளோ, இந்தியாவின் அரசாங்கமோ.. குடிகேடியான தமிழக அரசியல்வாதிகளோ அல்ல. நாம் தான். தமிழ் மண்ணின் மைந்தர்கள் தமக்குள்ளான பூசல்களைக் களைந்து இன விடுதலைக்கு உழைக்க கடமைப்பட்டவர்கள் ஆவோம்.
..யாழினி..
No comments:
Post a Comment