JULY 18, நாம் தமிழர் கட்சியின் சார்பில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே நடந்தது.
பேராசிரியர் தீரன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், சாகுல்அமீது, கலைக் கோட்டுதயம், வக்கீல் தடாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நாம்தமிழர் கட்சி இயக்க தலைவர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
சீமான், ‘’முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரை இழக்கலாம், ஆனால் உரிமையை இழக்க கூடாது என்ற முழக்கத்தோடு இந்த முல்லை பெரியாறு உரிமை மீட்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக் மற்றும் என்ஜினீயர் பெயரை எல்லாம் எனது தமிழ் மக்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் முல்லை பெரியாறு அணையை மட்டும் நம்மால் சொந்தம் கொண்டாட முடியவில்லை.
முல்லை பெரியாறு அணையை முதலில் கட்டிய போது யாருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் 1976-ம் ஆண்டு இடுக்கி அணை கட்டிய பின்னர் தான் பிரச்சனை ஏற்பட்டது. நமது மாநிலத்தில் விளையும் உணவு பொருட்கள் மற்றும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு நாம் தருகிறோம்.
ஆனால் அந்த உணவு பொருட்களுக்கு தேவையான தண்ணீரை அண்டை மாநிலங்கள் தர மறுக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த போராட்டம் எங்கள் உரிமையை மீட்கும் போராட்டமாக தான் இருக்கும். இந்த அணை பிரச்சனைக்கு முதலில் இருந்தே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தான் காரணம்.
அதே போல் என் இன அழிவிற்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம். எனவே தான் அந்த கட்சியை தமிழ்நாட்டில் தோற்கடித்தோம். தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது. அந்த கட்சியுடன் இனி எந்த கட்சியும் கூட்டணி வைக்க கூடாது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கூட்டணி வைக்க கூடாது. எத்தனை சோதனை வந்தாலும் வெல்லப்போவது பென்னிக்குக் கட்டிய பலமான முல்லை பெரியாறு அணை தான்.
இதில் கேரளா, மத்திய அரசுகளின் பசப்பு வார்தைகளை நம்பாமல் நீதிமன்றத்தை மட்டுமே தமிழக அரசு சார்ந்து நிற்க வேண்டும். எனவே தமிழ் மக்களே முல்லை பெரியாறு உரிமை மீட்கும் வரை நாம் ஓயக்கூடாது. அக்டோபர் 15-ந்தேதி மதுரையிலிருந்து முல்லை பெரியாறு நோக்கி பேரணி நடத்தி, அங்கு முற்றுகையிட்டு கூட்டம் நடத்தப்படும்.
அன்றைய தினம் கேரளாவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப் படும். அதற்கான உங்களை அழைக்க தான் இந்த கூட்டம்’’என்று பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment