கலங்கித்தவித்திருந்த எம்தமிழர் கவலைகள் தீரும்தினம் கண்ணில் தெரிகிறது ..
கண்ணீர்மட்டுமே சுமந்த எம்கண்கள் இனி வண்ணமிகுகனவுகளையும் சுமக்கும்
ஓலங்களால் ஒப்பாரிகளாய் ஒலித்த எம் விடியலின்பொழுதுகள் இனி பூபாலங்களால் புலரும்!
முள்வேலிகளில் முகம்கிழிந்த எங்கள் யாழின்தென்றல் இனி தமிழ்பொங்க இனிதாய்வீசும்
வன்னிவீதிகளில் வெடிச்சத்தம் இனிக்கேட்காது, எங்கள் பிஞ்சுகள் விளையாடும்!!
கொஞ்சுதமிழ்ப்பெண்டிரைக் கொத்திச்சென்ற சிங்களக்கழுகுகளின் சிறகுகள் பிய்க்கப்படும்
வன்புணர்வால் வண்ணமிழந்த கதைகள் இனியில்லை எம்தேசத்தில்.
தவழ்ந்த தாழ்வாரங்களையும், முற்றத்தின் நறுமலரையும் முகம்மலர்த்தும் உறவுகளையும் விட்டுப்பிரிந்து
உடைமைகளைத் தலையிலும் உணர்வுகளை நெஞ்சிலும் உயிரைக் கையிலும் சுமந்து நடைப்பிணமாய் நடக்கும் பயணங்கள் இனியில்லை எம்பாதைகளில் ...
ஒருவாய் உணவின்றி உடுக்க உடையின்றி காற்றின் அசைவுக்கும் காதைப்பொத்தி...
இனியிந்த இம்சைகள் எங்கள் பிள்ளைகளுக்கில்லை..அவைகள் பள்ளிக்குப்போகும்!!
சேரிடம்அறியா விதிவழிச்சென்று பன்னெடுங்காலமாய் எங்கெங்கோவாழ்ந்து சுயம் தொலைத்துக்கொண்டிருக்கும்
புலம்பெயர்ந்தோர் வாழ்வு இனிப்புதிதாய் மலரும் எம்தாய்மண்ணில்.
தன்னைவளர்க்கவும்...பிள்ளைகுட்டி பொருளைச்சேர்க்கவும் தமிழின்தலைமீதேறி சவாரிசென்றார்
எம்தமிழர்கள் இறந்துபடுகையில் ஏய்த்து நாடகமாடினார் இனி அவர் தலைக்கவிழ்ந்து மாய்வார்!!
அம்மாவென்றும்...ஆண்டவனே என்றும் அலறித்துடித்த எம் ஈனக்குரல்கள் ... இன்று கேட்டுவிட்டன உலகத்தின் காதுகளில்.
இந்தியா நினைத்திருந்தால் என்றோ செய்திருக்கலாம், ஈழத்தை வைத்து அரசியல் வளர்த்தோர் ஏனோ செய்யவில்லை
இன்று வந்திருக்கிறதோர் வெள்ளி எங்கள் வானில் விடியலின் அறிகுறி!!
எங்கள் சுதந்திரதாகம் தணிக்க வந்ததோர் மேகம்.. ஈழ விடுதலைக்குத் துணையிருங்கள் எம்மக்களை விடுவியுங்கள்
எங்கள் கோடிக்கோடி நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
இன்று வந்திருப்பதோர் தீப்பொறி ... அக்கினிக்குஞ்சு
விடுதலைத் தீ வளர்ப்போம்...விடியும் நிச்சயம் . கலங்காதிரு மனமே நம் கவலைகள் யாவும் தீரும் ஒருதினமே!!
...யாழினி...
11 comments:
யாழினி நான் உங்கள் எழுத்துக்களை ரொம்ப விரும்பி படிக்கும் ஒரு வாசகன், தமிழர் பிரச்சனைகளை ரொம்ப உருக்கமா எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள் யாழினி.
யாழினி என்ற யாழை இசைப்பவளே என்ற ஒரு மென்மையான பெயரை உடைய நீங்கள், வாளை ஏந்தி போர்க்களம் சொல்லும் வீர நங்கையாக உங்கள் எழுத்துக்கள் மிக்க பிரமாதம் வாழ்த்துக்கள்.
ஈழத்தமிழர் அவலங்களை இந்த உலகுக்கு பறைசாற்றும் உங்கள் எழுத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
தமிழ் செல்வன்.
arumai.
vaazhthukal
mullaiamuthan.uk
ஈழத்தின் குரலாய் ஒலிக்கும் யாழினிக்கு வாழ்த்துக்கள்.
ஈழத்திலே வசந்தம் திரும்பும், சிங்கள காடையர்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவார்கள். கலங்காதே மனமே.
நம்பிக்கை ஊட்டும் விதமா ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள் யாழினி.
அழகான பதிவு நன்றி!
abdullah
நிச்சயமாய் நம்புகின்றோம். ஒருநாள் விடியும் வீழ்ந்த நாம் மறுபடி எழுந்து நிற்போம். விழ விழ எழுவது தமிழரின் குணம். மேலும் உங்கள் கவிதைகளை பதிவுகளில் எதிர்பார்க்கின்றேன்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சரியான தருணத்தில் எழுதப்பட்ட பதிவு, நிறைய தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று மனம் சோர்ந்திருந்த சமயம் இது. நன்றி யாழினி.
Post a Comment