Jun 6, 2011

கூடா நட்பு கேடாய் முடியும்! கருணாநிதி விளக்கம் சொல்வாரா?

JUNE 7, கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்து யாருக்கு எச்சரிக்கை என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 88வது பிறந்த நாளில் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற ஒரு பழமொழியை கூறியிருந்தார். அதற்கு அவர் எந்த விளக்கத்தையும் கூறாமல் விட்டுவிட்டது மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைக் குறித்துத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது பற்றி அவர் சரியான விளக்கத்தை கூறாமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகுந்த வேதனையே ஏற்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திட்டமிட்டு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வினரே. இதற்கு கருணாநிதி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

20 கிலோ இலவச அரிசியை வழங்கிய போது எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அரசியல் தரகர்களுக்கு இடம் தராமல் வழங்கியிருப்பது சிறந்த அரசியல் நிகழ்வாகும். அரசு அறிவித்து செயல்படுத்தி வந்த எல்லாத் திட்டங்களையும் அடுத்து வரும் அரசு புறக்கணிப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை முழுமையாக புறக்கணிக்காமல், மற்ற அரசு அலுவலகங்கள் அமைய தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதன் கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்திருந்தால் பொதுநலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Anonymous said...

தன் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால் எல்லோரும் நல்லவர். தனது தவறுகள் வெளியே வந்து அதற்காக யாரும் உடன்படவில்லை என்றாலோ, தாங்கிப் பிடிக்கவில்லை என்றாலோ கூடா நட்பு என்று வசனம் பேச வேண்டியது. போய்யா! நீயும் உன் ஏமாற்று மொழியும்!!

- MOHAMED THAMEEM