Jun 24, 2011

ஈழப்போராட்டத்தை சீர்குலைத்த இந்தியாவின் 'ரா'!

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை.

நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்கள் செய்த “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தருவது. ஈழப்போராளிகளைக் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது.

 இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராகவும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்தவர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான்.

பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை - அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு போய் துரோகம் - குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.

No comments: