Jun 12, 2011

இலங்கை பிரசினைக்கு இந்தியா உதவாது: சீமான் அறிக்கை!

சென்னை, ஜூன் 13, இந்தியாவின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்

அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும்.

அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியான செய்திகள் வேறு
வேறு விதமாக உள்ளன.

தமிழர் பிரச்சினைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது. சிவசங்கரமேனன் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசு தனக்கு உகந்த வகையில் முடிவெடுக்கக் கூடியது. என்று இந்திய அரசு கருதுமானால், அப்பிரச்சினையில் எந்த விதத்திலும் இந்தியா தலையிடாது என்பதுதான் அதன் நிலை ஆகும்.

பிறகு ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும் என்ற நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறுவதன் பொருள் என்ன? சிவசங்கரமேனனின் வார்த்தைகளில் உண்மையான,  நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அக்கறை பிரதிபலிக்க வில்லை

இதுமட்டுமல்ல,  இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று தூக்கி எறியப்பட்ட 13-வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வை உருவாக்குவதாக இலங்கை அரசே கூறியுள்ளது என்று கூறுகிறார்.

ஈழத்தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு இந்தியா ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கோரும் இலங்கை தமிழர் கட்சிகள், அதன் இரட்டை முகத்தை சிவசங்கர மேனனின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை போர் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கேட்டதற்கு, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை. என்று பதில் அளித்துள்ளார்.

இது மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசை இந்தியா காப்பாற்றும் என்ற நேரடியான பதிலாகும். மேலும் இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் 40 ஆயிரம் பேர்வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அமைப்புகளும், மனித உரிமைக் குழுக்களும் குற்றஞ்சாட்டுகின்றனவே, அது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்ற வினாவிற்கு, அப்படிப்பட்ட தகவல்களில் உண்மை உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தலாம் என்று சிவசங்கர மேனன் கூறியுள்ளார்.

முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் நடந்த போரில் பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஐ.நா. வின் கொழும்புத் தூதரக பேச்சாளராக இருந்த கார்டன்வீஸ் போன்ற நேர்மையான அதிகாரிகள் கூறியிருந்தனர். பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்த ஐ.நா. நிபுணர் குழு பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது

ஆனால் இந்தியாவின் தேசபாதுகாப்பு ஆலோசகர் அப்படிப்பட்ட தகவல்கள் கேள்விக்கு உட்படுத்தக்கூடியவை என்று கூறியதிலிருந்து, தமிழினப் படுகொலை பற்றிய உண்மையை இந்தியா புதைக்க முயற்சிப்பதும், தன்னை காப்பாற்றிக் கொள்ள அது இலங்கை அரசின் பக்கமே நிற்கும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

தன்னைச் சந்தித்துப் பேசிவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கரமேனன் எப்படிப்பட்ட நபர் என்பதை அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையான இந்திய அதிகாரி சிவசங்கரமேனன் ஆகும்.

ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்பதையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஒரு போதும் முன்வராது என்பதையும் தமிழக முதல்வரும் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: