Jun 23, 2011

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயல்!

JUNE 24, ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனூப் உட்பட பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்பகுதியில் திடீரென நுழைந்த மாவோயிஸ்டுகள், சரமாரியாக சுட்டனர். இதில், மராண்டியின் மகன் அனூப் உட்பட, 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, மாவோயிஸ்டுகள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிதிக் மாவட்ட கோர்ட் இந்த வழக்கை விசாரித்தது.

சத்திரபதி மண்டல், மனோஜ் ராஜ்வர், ஜிதன்மராண்டி, அனில்ராம் ஆகியோரை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, என்ன தண்டனை என்பதை, கோர்ட் நேற்று அறிவித்தது. நான்கு மாவோயிஸ்டுகளுக்கும் மரண தண்டனை அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பு குறித்து, முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கருத்து கூறுகையில்," மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல். தண்டனை விதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உடனடியாக மாவோயிஸ்டுகளுடன், ஜார்க்கண்ட் அரசு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். தங்களின் குற்றங்களுக்கு மாவோயிஸ்டுகள் வருத்தம் தெரிவித்தால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, பொது அரசியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

No comments: