Mar 28, 2011

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டும்!! தேசபக்தியும்!!

மார்ச் 29, : கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன.

நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்பினார்.

இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள்.

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்.

No comments: