Mar 27, 2011

சுவாமி அக்னிவேஷ்சை தாக்கிய அரசு பயங்கரவாதிகள்!!

மார்ச் 28, தண்டேவாடா: சட்டீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடாவில் போலீஸ் நடத்திய அராஜகங்களை குறித்து விசாரிக்கச் சென்ற பிரபல சமூக சேவகரான சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டார்.

மாவோயிஸ்டுகளுக்கு உதவினார்கள் எனக் கூறி 300க்கு மேற்பட்ட ஆதிவாசிகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட கிராமங்களை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார் சுவாமி அக்னிவேஷ்.

இவர் செல்லும் வழியில் சல்வாஜூதுன் படையினரும், சிறப்பு போலீஸ் படை அதிகாரிகளும் இணைந்து தாக்கினர். இத்தாக்குதலில் பத்திரிகையாளர்களுக்கும் காயமேற்பட்டது.

போலீசாருக்கு உதவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு படையினர்தாம் ஆதிவாசிகளின் வீடுகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. ராய்ப்பூரிலிருந்து 550 கி.மீ தொலைவில் உள்ளது இவ்விடம்.

மூன்று வாகனங்களில் தத்மெத்லா என்ற இடத்திற்கு அக்னிவேஷும், குழுவினரும் சென்றுக் கொண்டிருந்தனர். தோர்ணாபாலில் காத்து நின்ற மக்கள் கூட்டம் இவர்களை எதிர்கொண்டது.

அக்னிவேஷின் மீது அழுகிய முட்டைகளும், கெட்டுப்போன தக்காளிகளும் வீசப்பட்டன. அக்னிவேஷை காரிலிருந்து பிடித்து இறக்கி அவருடைய தலைப்பாகை அவிழ்க்கப்பட்டது. படமெடுக்க முயற்சித்த பத்திரிகையாளர்களின் கேமரா பறிக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் கணவர்களை இழந்த விதவைகள் தாக்குதல் நடத்திய கூட்டத்திலிருந்ததாக அக்னிவேஷுடன் சென்ற பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை காண அக்னிவேஷும் குழுவினரும் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினர். இவர்களின் செயல் எல்லை மீறிய பொழுது அக்னிவேஷிற்கும், குழுவினருக்கும் திரும்பிச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.

யாரோ இவர்களை தூண்டிவிட்டுள்ளார்கள் என அக்னிவேஷ் கூறுகிறார். முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றதைத் தொடர்ந்து தங்களது பயணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என அக்னிவேஷ் தெரிவித்தார்.

No comments: