Mar 22, 2011

அட! தோற்க போகும் கட்சியில இப்படி ஒரு ரூல்ஸா!!

சென்னை. மார்ச்.22-தமிழகத்தில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க சோனியா மறுத்து விட்டார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட மாநில தேர்தல் குழு கடந்த 17-ந் தேதி டிக்கெட் கேட்டவர்களின் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை இறுதி செய்தது.

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ள வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் இந்த பட்டியலை தங்கபாலு வழங்கினார். நால்வரும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்தனர்.

அதனை லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினர். பட்டியலைப் பார்த்த சோனியா கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
அப்பட்டியலில் பெரும்பாலானோர் ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும், புதியவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சோனியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்பாளர் பட்டியலில் தங்கபாலு மனைவி பெயரும் இடம் பெற்று இருந்ததாகவும், அப்பட்டியலை நிராகரிக்கு மாறும் கூறிவிட்டாராம். புதிய வேட்பாளர் பட்டியலுடன் தன்னை வந்து சந்திக்கு மாறு தங்கபாலுவிடம் கூறியுள்ளார்.

சோனியாவின் புதிய திட்டப்படி தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் யசோதா (ஸ்ரீபெரும்புத்தூர்), பீட்டர் அல்போன்ஸ் (கடைய நல்லூர்), ஞானசேகரன் (வேலூர்), அமர மூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால் பாறை), ஜெயக்குமார் (நாமக்கல்), ஆர்.ராம்பிரபு (பரமக்குடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடானை),.

சுந்தரம் (காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர இரு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்த எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர்.செல்லக் குமார் போன்றோரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.

1 comment:

bandhu said...

//சோனியா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.//
இந்த வரி படிக்கும் வரை இது ஒரு சீரியஸ் பதிவு என்று நினைத்திருந்தேன்! காங்கிரஸ் -இல் உள்ளவர்களுக்கு ஏது முதுகெலும்பு போராட? அதுவும் சோனியாவை எதிர்த்து? போங்க சார், சும்மா தமாஷ் பண்ணாதீங்க!