Feb 16, 2011

காதலர் தினமும் & சங்கபரிவாரும் : ஒரு சமூக பார்வை!!!

காதலர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் நாள் உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் எதிர்ப்பு இல்லை. பாரதப் புண்ணிய பூமியில் மட்டும் அதற்கு எதிர்ப்பு தலை தூக்கி நிற்கிறது. குறிப்பாக இந்துத்துவா பேர் சொல்லி அலைகிறதே ஒரு கூட்டம், அந்தக் கூட்டம்தான் இதனை எதிர்த்து கூப்பாடு போடுகிறது. அன்றைய நாளில் காதலர்கள் பொது இடங்களில் சந்திக்கக் கூடாது; தங்கள் அன்பைப் பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடாது; மீறினால் அதே இடத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டச் செய்வோம் என்று எல்லாம் இந்து மதத்துக்கே உரிய வன்முறை வெறியாட்டங்களை வெளிப்படுத்துகின்றனர் - எச்சரிக்கின்றனர்.

சட்டரீதியான திருமண வயதை அடைந்த இருபாலரும் சந்திக்கவோ, பேசவோ உரிமை படைத்தவர்கள் ஆயிற்றே. அதனைத் தடுக்க அடுத்தவர்களுக்கு உரிமை ஏது? அந்த உரிமையை அவர்களுக்குத் தந்தவர்கள் யார்? உண்மையைச் சொல்லப் போனால் இப்படி அடுத்தவர்களின் உரிமைகளில் தலையிடுபவர்கள்தான் சட்டப்படி தண்டனைக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இந்து மதத்தில் காதலுக்கு இடம் இல்லையா? காதலையும் கடந்து களியாட்டங்களில் குளியலாட்டம் போட்ட கிருஷ்ணனைக் கடவுளாக வைத்துக் கொண்டு எந்த யோக்கியதையில் காதலர் நாளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவனையே முதல் கடவுளாக சிவனைக் கருதிப் போற்றுபவர்கள். காதலைக் கண்டிப்பது கயவாளித்தனம் அல்லவா!

கடவுள்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கும் பரமாத்மாவும் - ஜீவாத்மாவும் இணைகின்றன என்றெல்லாம் வியாக்கியானங்கள் செய்பவர்கள் காதலர் தினத்தை மட்டும் மடைமாற்றிப் பேசுவானேன்? கடவுள்களையும், காமத்தையும் விபச்சாரத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள் மனிதர்களின் இயல்பு உணர்ச்சியான காதலைக் கண்டிப்பது ஏன்? காதல் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; மற்ற மற்ற உயிரினங்களிடத்திலும்கூட இயல்பாக ஏற்படக் கூடிய மென்மையான இயல்புத் தன்மை. இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுச் சிந்தனையும் தேவை. காதலையும் காமவெறியையும் பிரித்துப் பார்க்கும் அறிவின்றி, வெறும் வெறி உணர்வில் ஒன்றை அணுகுபவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

காதலர் தினத்தை எதிர்ப்பதில் இன்னொரு முக்கியமான உட்பொருள் இவர்களிடத்தில் பதுங்கி இருக்கிறது. அது என்ன? காதல் என்பது ஜாதியைக் கடந்தது. இந்துத்துவாவாதிகளுக்கோ ஜாதி என்பது மிக முக்கியமானது. எக்காரணம் கொண்டும் ஜாதிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது - அதனை ஒழிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வருணா சிரமம், ஜாதிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டால், அந்த நொடியே இந்து மதம் ஒழிக்கப்பட்டதாக ஆகிவிடுமே! ஜாதி இருக்கும்வரைதான் இந்து மதம் உயிர் வாழும்; எனவே இந்து மதத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் கடும் தவம் செய்பவர்கள், ஜாதியை ஒழிக்கும் காதலர் தினத்தை ஒழித்துக் கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். காதலர் தின எதிர்ப்பு என்பது இந்த அடிப்படையில்தான் நடந்து கொண்டு இருக்கிறது.

இவர்கள் என்னதான் கச்சை கட்டி நின்றாலும் காதல் என்பது நாளும் வளர்ந்தே வருகிறது. காதல் திருமணங்கள் நாளும் பெருகியே வளர்கின்றன. இதன் மூலம் ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் நாட்டில் ஏராளம் நடந்த வண்ணமே உள்ளன. சில ஆண்டுகளுக்குமுன் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த பெற்றோர்களும்கூட, இப்பொழுதெல்லாம் அதனை அங்கீகரிக்கும் மனப்பான்மைக்கு பக்குவத்துக்கு வந்து விட்டார்களே. இதுதானே எதார்த்தம்!
இதில் இன்னொரு கூடுதல் சிறப்பு வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒழிக்கப்பட்டு விடுகிறது. ஜாதி ஒழிப்பு, வரதட்சணைக்கு இடமில்லாத இந்தத் திருமணப் போக்கு மூலம் புதிய சிந்தனைகளும், மாற்றங்களும் சமூகத்தில் மலர்ந்துவருவது நாகரிகத்திற்கான வழி நடையாகும். இந்தத் திசையில் சிந்திக்காமல் காதலர் தினத்தைக் கண்டிப்பது அசல் பிற்போக்குத்தனமாகும்.


நன்றி: விடுதலை நாளிதழ்.

No comments: