Feb 25, 2011

ஆண்டன் பாலசிங்கத்திடம் பிரபாகரன் என்ன கூறினார்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முத்துக்குமார் உயிர்விட்ட இடத்தில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த காலத்தில் முதல் முறையாக முத்துக்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடன் நீண்ட நேரம் என்னால் பேச முடியவில்லை. அதன் பிறகே அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் ஆண்டன் பாலசிங்கத்திடம் அண்ணன் பிரபாகரன், தீவிரவாதத்திற்கு பயங்கர தீவிரவாதமே தீர்வு என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தைகள் தான் உண்மையாக இருக்கிறது. முத்துக்குமார் சொன்ன வேலைகளை சரியாக செய்து முடிப்பவர். அவரிடம் ஒருவேலையை ஒப்படைத்துவிட்டால் அந்த வேலைக்காக அலையவேண்டியதில்லை. நேரத்தையும், காலத்தையும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்.

நானும் முத்துக்குமாரும், இந்த இயக்கத்தில் இணைந்திருப்பது பலருக்கும் விருப்பமில்லை. ஆனால் நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பதால், ஒற்றுமையுடன் செயல்பட்டோம். இனியும் அரசியலில் தொடர்ந்து அப்படியே செயல்படுவோம் என்று எண்ணியிருந்தோம். இங்கு வரும்போதெல்லாம் என் பாதுகாப்புக்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் முத்துக்குமார்தான். ஆனால் என்னால் அந்த சகோதரனை பாதுகாக்க முடியவில்லை. எனக்கும், என் இயக்கத்திற்கும் பெரிய இழப்பு. இதை நினைக்கும்போது எனக்கு அவமானமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

முத்துக்குமார் படுகொலை தகவலை கேட்டவுடன் மனநோயாளியாக திரிந்தேன். அவர் வெட்டப்பட்ட அவரது ரத்தத்தைப் பார்த்து கோபமும் வெறியும்தான் எனக்கு வந்தது. நான் முன்னின்று நடத்தி வைத்த திருமணம். ஆனால் இப்படி ஆகிவிட்டது. நான் முத்துக்குமார் வீட்டிற்கு சென்று, யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்தேன். ஆனால் பிள்ளை மாதரசி, மாமாவின் லட்சியத்தை நிறைவேற்றுங்கள் என்று எனக்கு தைரியம் சொன்னார். எங்களுக்கு சாவைக் கண்டு பயம் இல்லை. இவ்வளவு வலிமையாக நின்றபோது, முத்துக்குமாரை வெட்டிவிட்டு சென்றான் என்றபோது, அவன் யார் என்பதுதான் எங்களுக்கு தெரிய வேண்டும். இன்பமோ, துன்பமோ எங்களுக்கு கொடுத்தவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.

நாங்கள் மக்கள் ஜனநாயக கட்சியாகத்தான் செயல்பட நினைக்கிறோம். வன்முறைக் கட்சியாக அல்ல. தொடர்ந்து எங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. உண்மையான குற்றவாளியை கைது செய்ய தவறினால், இதுபோன்ற கண்டன கூட்டங்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்க மாட்டோம். பெரிய போராட்டங்கள் வெடிக்கும். சிபிஐ வரை இந்த வழக்கை கொண்டுபோவோம். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், 4 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அந்த அவகாசத்தை உங்களுக்கு தருகிறோம். உண்மை கொலையாளிகளை பிடித்துக்காட்டுங்கள். முத்துக்குமாரின் இழப்பு எனது வலது கையை வெட்டி எடுத்ததுபோல உணருகிறேன்.

தேர்தலில் காங்கிரஸ் ஒழிப்புதான் எங்களது லட்சியம். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பேன் என்று சொன்னபோது, விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னவர் முத்துக்குமார். நான் பத்து நாட்கள்தான் சிறைபட்டிருந்தேன். ஆனால் முத்துக்குமார் 10 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்தார். ஆனால் அது பெரியதாக வெளியே தெரியவில்லை. நான் சினிமாகாரன் என்பதால் மட்டுமே நான் சிறைப்பட்டது வெளியே தெரிந்தது. ரத்த பொட்டலம் கொடுப்பது தவறு என்று இந்த நாட்டிலே கூறுகிறார்கள். ஆனால் இது தவறு இல்லை. இந்த மண்ணை சேர்ந்தவனின் உதவியில்லாமல் முத்துக்குமார் படுகொலை நடக்கவில்லை. விரைவில் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

No comments: