Feb 4, 2011

மாவீரன் திப்புசுல்தான் & கேரள நம்பூதிரிகள்!! ஒரு வரலாற்று பார்வை!!!

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர் கள் ஆகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்" இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல பரங்கியர்களுக்குச் சிம்மச் சொப் ப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்து கொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், (பிராமணர்கள் ) தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.
"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுத மேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.
அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).
கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்கு முறையாகும் இது.

"நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. "மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்" (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120). "இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர்.
இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்" (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896)

பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான "வாட்டர்" என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.

நன்றி: ராமானுஜ தாத்தாச்சாரியார்.

No comments: