கொச்சி,பிப்.3:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சிக்கவைத்தது முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான அப்துல் கலீம் தெரிவித்துள்ளார். கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: "கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்தவுடன் சிலமணி நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தனர்.
இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச் சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன். பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச் செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.
பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.
வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத் தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது. நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment