கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி)) இந்தப் பிரிவுகளின் கீழ்குற்றம் சாட்டப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா? சாதாரண மானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள் ஆயிற்றே! மத்திய தணிக்கைத் துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்து விட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார்களே அவர்கள் ஒன்றை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.
லிபரான் ஆணையத்தின் அறிக்கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். 68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.
மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங்குவார். எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.
சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை. 19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடை போட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக வழக்கை நடத்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?
19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்? நீதிமன்றங்கள்தான் ஆகட்டும் மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல் மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்? கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் கொஞ்சம் கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.
நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்? காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.
சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.
பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற்புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும்பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா, பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிலுவையில் இருக்கும் வழக்குகளையாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா? 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே! உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடி யதே! குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே! அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?
தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?
டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின் மீதும், நிருவாகத்தினர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசின் செயல்பாடுதான் என்ன? ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது ஏன்?
அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே! ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது. கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்து விட்டது. கலவரங்களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்புகளும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)
ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முஸ்லிம்களை வேட்டையாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே. கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அற்ற துறைகளும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டன என்றால்? மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே! கலவரங்களின் போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற்றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர்கள்தான் அவர்கள்.
எந்தவித குறிப்பிட்ட செயல் திட்டமும் இன்றியே இந்த இரு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, அலுவலகங்களுக்கு தவறான முடிவுகளை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரின் குறிப்பு பக்கம் 12). இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவதற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான சட்டப்படியான தகுதி இருக்கிறதா? இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை? இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
நன்றி : மின்சாரம், விடுதலை நாளிதழ் (19-02-2011)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment