Feb 1, 2011

அடுத்து மக்கள் புரட்சி எற்படும் நாடு இந்தியா!! அதிர்ச்சி தகவல்!!!

பிப்,2: எகிப்தில் 30 ஆண்டுகளாக தொடரும் அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டுள்ளனர். ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள் வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது. கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது. 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.

ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். அந்த வரிசையில் அடுத்து இருப்பது இந்தியாதான். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை கூறி கொண்டாலும் அங்குதான் மனித உரிமை மீறல்களும், அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள், கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் நடந்துவருகிறது. சமீபத்தில் ட்ரான்ஸ் ப்ரன்சி இண்டர் நேசனல் வெளியிட்ட பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள். எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும். இதனை இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும். மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும் கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.

No comments: