Feb 7, 2011

அரபு நாட்டுகளில் மன்னராட்சி ஒழியட்டும்!! மக்களாட்சி மலரட்டும்!!

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் வரவேற்றுள்ளார். அத்தோடு இந்த எழுச்சியில் நவீன காலனியாதிக்க, ஸியோனிஸ சக்திகளின் கைப்பாவைகள் ஓங்காமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். துனிசியாவில் மக்கள் எழுச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் நீண்ட கால சர்வாதிகாரத்தை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அரசுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் யெமனிலும், ஜோர்டானிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

ஒட்டுமொத்த அரபு-முஸ்லிம் உலகில் இந்த எழுச்சி காலத்தின் கட்டாயமாக, தவிர்க்க முடியாத காற்றாக வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நவீன காலனிய சக்திகளின் பொம்மை அரசுகள் இந்த நாடுகளில் மக்கள் விரும்பிய ஜனநாயகம், சுதந்திரம், நீதி ஆகியவைகளை காலில் போட்டு மிதித்து, அவர்களை அடக்கி ஒடுக்கி வந்தன.

மக்களின் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டன. மனித உரிமைகள் நசுக்கப்பட்டன. ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்வதற்கு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அவைகள் பல சதித்திட்டங்கள் மூலம் ஒடுக்கப்பட்டன. இவையனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதரவுடனேயே அரங்கேறின. எகிப்திலும், அதன் அண்டை நாடுகளிலும் மக்களின் குறிப்பாக இஸ்லாமிய விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சமூக, அரசியல் அமைப்புகள் குறி வைக்கப்பட்டன.

ஒன்று அந்த அமைப்புகள் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில் பங்கெடுப்பதற்கு மறுக்கப்பட்டனர், அல்லது அந்தத் தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றிகளை வைத்தே புதிய அடக்கு முறைகளுக்கான களங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்தின் வீரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக சான்று பகர்கிறது.

இது முஸ்லிம் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்திற்கான அடையாளத்தை காட்டுகிறது. எகிப்தில் நடைபெற்று வரும் மக்கள் எழுச்சியைக் கண்டு சர்வாதிகார ஆட்சி புரியும் இன்ன பிற அரபு-முஸ்லிம் நாடுகள் பாடம் படிக்க வேண்டும். தங்கள் நாடுகளில் குடிமக்களின் உரிமைகளையும், மனித உரிமைகளையும் நிலைநிறுத்த பாடுபடவேண்டும், பாதைகள் வகுக்க வேண்டும்.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கை இனியும் தங்களால் காப்பாற்ற முடியாது என்றுணர்ந்த அமெரிக்கா அடித்தட்டிலிருந்து உருவாகும் மக்கள் அரசைக் கண்டு கவலை கொண்டுள்ளது. அதனால்தான் ஹுஸ்னி முபாரக்கைக் கைகழுவி விட்டு மக்களுக்கு ஆதரவு தருவது போல் நடிக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அவர்களின் விசுவாசிகளில் ஒருவரான உமர் ஸுலைமானை அரியணையில் அமர்த்த திட்டம் போடுகின்றனர், தயாராகின்றனர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமோ, இன்னபிற ஜனநாயக அமைப்புகளோ அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர் என குறிப்பிட்ட இ.எம். அப்துர் ரஹ்மான் எகிப்தில் ஜனநாயகம் மீண்டும் மலர இந்திய அரசு முழு ஆதரவு தெரிவித்து தேவையான நடவடிக்கையில் இறங்கவேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

No comments: