Feb 1, 2011

"எகிப்து வேண்டுமா? முபாரக் வேண்டுமா? மக்கள் கேள்வி!!

கெய்ரோ : எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்னும் எட்டு நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என்று எல் பரேடி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி கெடு விதித்துள்ளது. நேற்று நடந்த முழு அடைப்பை அடுத்து இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் அக்கூட்டணி அறிவித்துள்ளது. அதோடு, "எகிப்து வேண்டுமா? முபாரக் வேண்டுமா?' என்று ராணுவத்திடம் அது கேள்வி எழுப்பியுள்ளது.

எகிப்தில் அதிபர் ஹோஷ்னி முபாரக்கை எதிர்த்து, மக்கள் ஏழாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். தலைநகர் கெய்ரோ, சூயஸ், அலக்சாண்டிரியா, மன்சூரா உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்தன. கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில் நேற்று 50 ஆயிரம் பேர் கூடி அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நகரின் பல இடங்களில் ராணுவ பீரங்கிகள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கலைப்பதற்காக தொடர்ந்து சில ராணுவ விமானங்கள் வானத்தில் பறந்து வட்டமிட்டு வந்தன. அதைக் கண்டு மக்கள் மேலும் கொதிப்படைந்தனர்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி, ஜனநாயக இயக்கத் தலைவரான எல் பரேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து "ஏப்ரல் 6 இளைஞர் கூட்டணி'யை நேற்று உருவாக்கினர். எல் பரேடி முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவாகி விட்டார். நேற்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு இக்கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது. அதனால், நாட்டின் பிற பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை. தொடர்ந்து இன்று 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்கும் "10 லட்சம் பேர் பேரணி'க்கு இக்கூட்டணி நேற்று அழைப்பு விடுத்துள்ளது.

No comments: