Feb 3, 2011

எகிப்து, துனிசியா கலவரம் எதிரொலி: ஏமன் அதிபரும் பதவி விலகுகிறார்!!

பிப். 3-துனிசியா நாட்டில் மக்கள் புரட்சியால் அதிபர் நாட்டை விட்டு ஓடி விட்டார். இதை தொடர்ந்து இப்போது எகிப்தில் அதிபரை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இரு நாடுகளில் நடக்கும் போராட்டம் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரபு நாடான ஜோர்டானில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர். இப்போது இன்னொரு அரபு நாடான ஏமன் நாட்டிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் அதிபராக இருப்பவர் அலி அப்துல்லா சலே இவர் 32 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். துனிசியா நாட்டில் கலவரம் நடந்ததுமே கடந்த மாதம் இங்கும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக எகிப்து போல பெரிய அளவில் போராட்டம் நடத்த எதிர் கட்சிகள் தயாராகி வருகின்றன.இதையடுத்து நேற்று பாராளுமன்ற அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அதிபர் அலி அப்துல்லா எனது பதவி காலம் 2013-ம் ஆண்டு முடிகிறது. அத்துடன் பதவி விலகி விடுவேன். நாட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு நான் செயல்படுகிறேன். என்று கூறினார். ஆனாலும் அதிபருக்கு எதிராக திட்டமிட்டபடி பெரிய போராட்டத்தை நடத்த போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்து உள்ளன.

No comments: